பெங்களூரு,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை பயன்படுத்தி, தமிழகம், கர்நாடகாவில் 500க்கும் மேற்பட்டோரிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்த ஓசூர் பெண் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிரட்டல்
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் பவித்ரா, 35; பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லில், ‘புளு விங்ஸ்’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
இவர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, சேலம் மற்றும் கர்நாடகாவின் ஆனேக்கல், அத்திப்பள்ளி, சந்தாபூர் பகுதிகளில் வசிப்பவர்களிடம், ‘என் அறக்கட்டளைக்கு, ரிசர்வ் வங்கியில் இருந்து 17 கோடி ரூபாய் வந்துள்ளது.
‘என்னிடம் கடன் வாங்கிக் கொள்ளுங்கள்; முழு தொகையை திருப்பி தர வேண்டாம். வாங்கும் கடனில் பாதி கொடுத்தால் போதும்; மீதி மானியம்’ என்று கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்துடன் கூடிய, சில போலி ஆவணங்களையும் காண்பித்துள்ளார்.
‘கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, முன்பணமாக 25,000 முதல் 30,000 ரூபாய் வரை கட்ட வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியதை நம்பி கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், முன்பணம் கட்டினர். ஆனால், கடன் கொடுக்காமலும், முன்பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்து உள்ளார்.
ஏமாந்தவர்கள், ‘போலீசில் புகார் அளிப்போம்’ என்று கூறினாலும், ‘கொலை செய்பவனுக்கே ஜாமின் கிடைத்து விடுகிறது; எனக்கு கிடைக்காதா’ என்று திமிராக பேசியதுடன், ‘உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
13 பேர் மீது வழக்கு
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரில், பவித்ரா, அவரது கூட்டாளிகள் என 13 பேர் மீது, கர்நாடகாவில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன.
இவர்களில் பவித்ரா உள்ளிட்ட ஆறு பேரை, அத்திப்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்