ஜபுவா: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சிகள் கூட நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி 400 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபுகா மாவட்டத்தில் பழங்குடின மக்களுக்கு மத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “வரும் மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் 370க்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்காக கடந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 370 வாக்குகள் பெறுவதை வாக்களார்கள் உறுதி செய்யவேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும் என இப்போது தெரிவிக்கின்றனர். பாஜகவின் தாமரைச் சின்னம் 370க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
நான் ஜபுகாவுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வரவில்லை. சமீபத்தில் நடந்த மாநில தேர்தலில் மக்கள் அளித்த அளப்பரிய ஆதவுக்காக நன்றி தெரிவிக்க ஒரு சேவகனாக இங்கு வந்திருக்கிறேன். எங்களுடைய இரட்டை இயந்திர ஆட்சி மத்திய பிரதேசத்தில் இரட்டை வேகத்தில் வேலை செய்கிறது. இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன்பாக மாநிலத்தில் ரூ.7,550 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடிகளை புறக்கணித்து வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கிராமத்தினர், ஏழைகள், விவசாயிகள் காங்கிரஸ் கட்சியின் நினைவுக்கு வருவார்கள்.
தங்களது தோல்வியை அறிந்து கொண்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள், கடைசி தந்திரத்தை கையாளுகின்றன. கொள்ளை மற்றும் பிரித்தாளுவது என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. கடந்த ஆண்டு மத்திய அரசு தேசிய அரிவாள் ரத்த சோகை நோய் ஒழிப்பு இயக்கம் 2047-ஐ அறிமுகப்படுத்தியது. இது அரிவாள் செல் நோயால், குறிப்பாக பழங்குடியின மக்களுக்கிடையில் ஏற்படும் சுகாதாரச் சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டது. நாங்கள் வாக்குகளுக்காக அரிவாள் ரத்த சோகை நோய்க்கான பிரச்சாரத்தை தெடங்கவில்லை. பழங்குடியினரின் நலனுக்காகவே தொடங்கி உள்ளோம்” என தெரிவித்தார்.