கொச்சி, கேரளாவில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு கிடங்கில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதில், ஒருவர் பலியானார்; பெண்கள், குழந்தைகள் என 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தின் திரிபுனித்துறையில் ஏராளமான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு கிடங்கு இயங்கி வந்தது. இங்கு, நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் அருகில் இருந்த, 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பலத்த சேதமடைந்தன.
அப்பகுதியில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகின; இதற்கிடையே, தகவலறிந்து வந்த தீயணைப்புப் படை மற்றும் மீட்புக்குழுவினர், வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதன்பின் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் ஒருவர் பலியானார்; பெண்கள், குழந்தைகள் என 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, களம்சேரி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் எவ்வித அனுமதியுமின்றி, குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாக இந்த பட்டாசு கிடங்கு இயங்கியதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement