பிள்ளைகளை பிச்சை எடுக்கவைத்து 45 நாட்களில் ரூ. 2.5 லட்சம் சம்பாதித்த பெண் – அதிர்ச்சி சம்பவம்

இந்தூர்,

மத்தியபிரதேசம் இந்தூரில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பர்வேஷ் என்ற தனியார் தொண்டு நிறுவன தலைவி ரூபாலி இன்று இந்தூர் – உஜ்ஜைனி சாலையில் லவ்-குஷு சந்திப்பில் மகளுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்டனர். அந்த பெண்ணின் பையை சோதனை செய்ததில் அதில் 19 ஆயிரத்து 200 ரூபாய் இருந்ததை கண்டுபிடித்தார்.

இதையடுத்து, அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த அப்பெண்ணின் பெயர் இந்திரா பாய் (வயது 40). இவருக்கு திருமணமாகி 5 பிள்ளைகள் உள்ளன.

இந்திரா பாய் தனது 3 பிள்ளைகளை இந்தூர் சாலையில் பிச்சையெடுக்க வைத்து 45 நாட்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளார். 8 வயதான மகள், 9 மற்றும் 10 வயதான மகன்களை கட்டாயப்படுத்தி தன்னுடன் சேர்ந்து இந்தூர் சாலையில் பிச்சையெடுக்க வைத்துள்ளார்.

பிச்சையெடுத்து 45 நாட்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்த நிலையில் அதில் 1 லட்ச ரூபாயை இந்திரா பாய் தனது மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். எஞ்சிய பணத்தில் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். மேலும், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை நிரந்தர வைப்பு திட்டத்தில் (fixed deposit scheme) முதலீடு செய்துள்ளார். மனைவி இந்திரா பாயின் பெயரில் அவரது கணவர் சமீபத்தில் ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். அந்த ஸ்கூட்டரில் கணவன், மனைவி இருவரும் இந்தூர் நகர் முழுவதும் சுற்றியுள்ளனர். இந்திரா பாயின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தானில் 2 அடுக்கு மாடி வீடு உள்ளது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தொண்டு நிறுவன தலைவி ரூபாலி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும், இந்திரா பாயின் 8 வயது மகளை ரூபாலி மீட்டார். அதேவேளை, இந்திரா பாயுடன் சேர்ந்து பிச்சையெடுத்த அவரின் 9 மற்றும் 10 வயதான 2 மகன்களையும் பிடிக்க முற்பட்டபோது அந்த சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்த இந்திரா பாயை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

மேலும், மீட்கப்பட்ட இந்திரா பாயின் மகளை குழந்தைகள் நல ஆணையத்திடம் ஒப்படைந்தனர். தப்பியோடிய 2 மகன்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேவேளை, இந்திரா பாயின் எஞ்சிய 2 பிள்ளைகள் ராஜஸ்தானில் உள்ளது தெரியவந்துள்ளது.

பெற்ற தாயே பிள்ளைகளை பிச்சை எடுக்கவைத்து 45 நாட்களில் ரூ. 2.5 லட்சம் சம்பாதித்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.