பெங்களூரு : சுங்கச்சாவடி இல்லாத சாலையாக, பெங்களூரு – மைசூரு பத்து வழிச்சாலை மாற உள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் பணம் செலுத்தி, சில்லறை வாங்கியதால், சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தடுக்க மத்திய அரசு ‘பாஸ்டேக்’ நடைமுறை அமல்படுத்தியது. இதன்மூலம் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல், பெருமளவில் குறைந்து உள்ளது.
ஆனாலும் சில நேரத்தில் தொழில்நுட்ப கோளாறால், ‘பாஸ்டேக்’ ஸ்கேன் ஆகுவது இல்லை.
இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி அகற்றுவதுடன், புதிய வகையிலான சுங்க கட்டண முறையை அமலுக்கு கொண்டு வர இருப்பதாக, மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
அதாவது நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, சாலைகளில் அதிநவீன நம்பர் பிளேட் ரீடிங் கேமராவை பொருத்த உள்ளனர்.
நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள், எவ்வளவு துாரம் பயணம் செய்கிறதோ, அதன் அடிப்படையில், வாகன பதிவெண் உடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து, சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில் பெங்களூரு – மைசூரு பத்து வழிச்சாலையில் உள்ள, சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, சாலைகளில் அதிநவீன நம்பர் பிளேட் ரீடிங் கேமரா பொருத்தப்பட உள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் சுங்கச்சாவடி இல்லாத, முதல் நெடுஞ்சாலை என்ற பெயர், பெங்களூரு – மைசூரு பத்து வழிச்சாலைக்கு கிடைக்க உள்ளது. சோதனை அடிப்படையில் தான், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் வெற்றி அடைந்தால், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும், சுங்கச்சாவடி அகற்றப்பட்டு, அதிநவீன நம்பர் பிளேட் ரீடிங் கேமரா முறையில், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்