தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 12.2.2024 அன்று கூடியது. அப்போது சில கருத்துக்களை தெரிவித்த ஆளுநர் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் அமர்ந்துவிட்டார். மேலும் சபாநாயகர் உரையை படித்து முடித்ததும், ஆளுநர் உரையை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டு இருக்கும் போதே வெளியேறினார், ஆளுநர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அவரை சட்டப்பேரவைக்கு அழைத்து வரும்போது தேசியகீதம் இசை வடிவில் ஒலிபரப்பப்பட்டு முறைப்படியே வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபுக்குமாறாக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது தேசிய கீதத்தையே அவமதிக்கும் செயலாகும்” என கொதித்திருக்கிறார்.

“சட்டப்பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது தேசியகீதம் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு. ஆனால் ஆளுநர் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்றுகூறி வெளியேறியுள்ளார். இது திட்டமிட்ட சதியாகும்” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

வி.சி.க தலைவர் திருமாவளவன், “அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழக மக்களை அவமதிக்கும் வகையிலும் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியின்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு கட்சியின் பிரதிநிதியை போலவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். எனவே அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழகத்தில் இருந்தும் வெளியேற வேண்டும்” என வெடித்திருக்கிறார்.
ஆளுநர் உரையை, ஆளுநர் ஆர்.என் ரவி படிக்காமல் தவிர்க்கும் அளவுக்கு அதில் என்ன இருந்தது… என அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசிய போது, “பொதுவாக ஆளுநர் உரையில் மாநில அரசின் சாதனைகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இந்த உரையில் அவை இடம் பெற்றிருந்தது. கூடுதலாக மத்திய அரசை விமர்சித்தும் சில பகுதிகள் இருந்தன.
ஆளுநரை பொறுத்தவரை, கடந்த ஆண்டு உரையில் அவருக்கு ஏற்பு இல்லாத விஷயங்களை தவிர்த்து விட்டு படித்தார். அந்த சர்ச்சையே இப்போது வரை ஓயவில்லை. இந்த நிலையில் இந்த முறை உரையை முழுமையாக படித்தால், அதில் இருக்கும் விஷயங்கள் அனைத்தைக்கும் ஆளுநரும் ஏற்றுக்கொண்டு விட்டார் என்ற அர்த்தம் வரும். அதனை தவிர்க்கவே அவரை உரையை வாசிப்பதை தவிர்த்திருக்கலாம்.

மேலும் மத்திய அரசின் பிரதிநிதியாக அவர் இங்கு செயல்படுவதால், ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டுகளை வாசிக்க வேண்டிய நிலை இருந்தது. குறிப்பாக,
`மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை நிறுத்தியதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு பங்களிப்பு செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இந்த நியாயமற்ற அணுகுமுறையால், முழு திட்டச்செலவையும் மாநில அரசு செய்ய வேண்டியிருக்கிறது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டோம்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் போது சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.’ போன்ற மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள் ஆளுநருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அவர் உரை தனக்கு அளிக்கப்பட்டதுமே இதனை மாநில அரசுக்கு தெரியபடுத்தி இருக்கலாம். மாறாக உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, பின்னர் படிக்காமல் தவிர்த்தது அரசிலாக தான் பார்க்க முடிகிறது. இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஆளுநர் உரையில் இருந்த விஷயங்கள் கவனம்பெறாமல் போனதும் இங்கு குறிப்பிடத்தக்கது ” என்கிறார்கள்.
இதையடுத்து ஆளுநர் ரவியை ஆத்திரமூட்டிய உரையில் என்னதான் இருக்கிறது என்ற கேள்வியுடன் கமலாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம், “ஆளுநர் உரையில், `நாட்டிலேயே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாக தமிழகம் திகழ்கிறது, அதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசம் – ரூ.33 லட்சம் கோடி, குஜராத் – ரூ.26 லட்சம் கோடி, கர்நாடகம் – ரூ.10 லட்சம் கோடி என இருக்கையில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. ‘இயற்கைப் பேரிடர்களை திறம்படக் கையாண்ட இந்த அரசுக்கு எனது பாராட்டுகள்’ என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் மக்கள் எவ்வளவு துயரத்தை சந்தித்தார்கள் என்பது நமக்கு தெரியும்.

‘சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’ என்று உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 2017 ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை சுமார் 27,959 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக கொடுத்தது மட்டுமல்லாது கொரோனா காலக்கட்டத்தில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14,336 கோடி கடன் உதவியும் வழங்கியது மத்திய அரசு. சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை திமுக அரசு தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையெனில், ஆளுநர் உரையில் இதுபோன்ற பொய்களை சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தினம்தோறும் தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக கஞ்சா விற்பனை அதிகமாக இருக்கிறது. எனவே ‘சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது’ என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.

முதலில் அனைவருக்கும் உரிமை தொகை கொடுப்பதாக சொன்னார்கள். பிறகு 1.2 கோடி குடும்ப அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றி விட்டார்கள். ஆனால் உரையில் ‘மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்’ என சொல்கிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களை, சிறந்த குடிமகன் என்று அங்கீகரித்து, அவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவித்தது. ஆனால் தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் நாட்டின் முன்னோடி திட்டம் என்று ஆளுநர் உரையில் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY