பெங்களூரு: ஒருவருக்கு கூட வேலை தராத இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை கர்நாடக அரசு மீண்டும் திரும்ப பெற வேண்டும் என பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் அம்மாநில சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஹுப்ளி தார்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் பேசுகையில், ”எனது தொகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு 58 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ. 1.5 கோடி இருந்த போது, ரூ.35 லட்சத்துக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு வழங்குமாறு நான் விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தேன்.
அப்போது இந்த நிறுவனம் உங்களின் (விவசாயிகளின்) பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்பை வழங்கும் என உறுதியளித்தேன். ஆனால் ஒருவருக்கு கூட இதுவரை அந்த நிறுவனம் வேலை வழங்கவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இன்னும் நேரில் சந்திக்க முடியாமல் நான் கஷ்டப்படுகிறேன்.
எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றாத இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் இருந்து 58 ஏக்கர் நிலத்தையும் திரும்ப பெற வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா, ”அரசிடம் இருந்து சலுகைகளை பெறும்போது நிறுவனங்கள் அளித்த வாக்குறுதிகளை கண்காணிக்க வேண்டும். அவற்றை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த கர்நாடக தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, ”தொழில்த் துறை விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கர்நாடக பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட்டின் இந்த பேச்சு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.