மும்பை கடற்கரையில் அடிக்கடி டால்பின் மீன்களின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த டால்பின் மீன்கள் மனிதர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் முதல் முறையாக மகாராஷ்டிரா ஆற்றில் சுறா மீன் புகுந்து மீனவரை தாக்கி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கரில் இருக்கும் வைதர்ணா ஆறு கடலோடு சேர்ந்திருக்கிறது. கடலில் சீற்றம் அதிகரிக்கும் போது கடல் நீர் ஆற்றுக்குள் வருவது வழக்கம். ஹிதேஷ் கோவாரி(34) என்ற மீனவர் வழக்கமாக மாலை நேரத்தில் அந்த ஆற்றுக்கு குளிக்க செல்வது வழக்கம். அவர் நேற்று மாலை வழக்கம்போல் குளிக்க சென்ற போது அவரை சுறா மீன் ஒன்று தாக்கியது. ராட்சத சுறா மீன் ஹிதேஷின் ஒரு காலை கவ்விப்பிடித்துக்கொண்டது. ஹிதேஷ் மீனை எதிர்த்து போராடினார்.

அதோடு உதவி கேட்டு ஹிதேஷ் கத்தினார். உடனே பக்கத்தில் நின்றவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். ரத்தக்காயத்துடன் தண்ணீரில் கிடந்த ஹிதேஷை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். சிலர் ஹிதேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மற்றவர்கள் தண்ணீரில் இறங்கி சுறா மீனை அடித்து கரைக்கு கொண்டு வந்தனர். மீன் இறந்துவிட்டது.
இது குறித்து ஹிதேஷ் சகோதரர் உமேஷ் கூறுகையில்,”ஹிதேஷ் ஆற்றில் சுறாவை எதிர்த்து போராடினார். ஆனால் காலில் மூட்டுக்கு கீழ் பகுதியில் அதிகப்படியான சதையை மீன் கடித்து தின்றுவிட்டதால் ஹிதேஷ் மயங்கிவிட்டார். மீண்டும் சுறா மீன் ஹிதேஷை தாக்க முயன்றது” என்றார்.
சுறா மீன் உணவு தேடி கடலில் இருந்து ஆற்றுக்குள் வந்திருக்கவேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹிதேஷ் காலில் மூட்டுக்கு கீழ் பகுதியில் பெரும்பாலான சதையை சுறா மீன் கடித்து தின்றுவிட்டது. இதனால் அவரது காலில் மூட்டுக்கு கீழ் உள்ள பகுதியை வெட்டி எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலை வெட்டி எடுக்காவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடல் விலங்குகள் ஆர்வலர் பூசன் போயர் கூறுகையில், ”மகாராஷ்டிராவில் முதல் முறையாக இது போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆண் சுறாக்கள் உணவு தேடி ஆற்றுக்குள் வரக்கூடியவைதன்” என்று தெரிவித்தார்.