பெங்களூரு : பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, நான்கு நாட்கள் மது விற்பனைக்கு தடை விதித்த மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
பிப்., 16 மற்றும் 20ம் தேதிகளில் மட்டும் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு வரை மதுபான தடையை அமல்படுத்த உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை 16ம் தேதி நடக்கிறது. 20ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
தேர்தல் விதிமுறைப்படி, தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர், அத்தொகுதியில் மதுபானம் விற்க தடை விதிக்கப்படும். எனவே, பிப்., 14ம் தேதி மாலை 5:00 மணி முதல் 17ம் தேதி காலை 6:00 மணி வரை பெங்களூரில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு மதுபான விற்பனையாளர்கள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மாநிலத்துக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனவும் கூறினர்.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள், பார் அண்ட் ரெஸ்டாரென்ட் சங்கத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது:
விதிமுறைப்படி, ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் மதுபான விற்பனைக்கு தடை விதித்து, கலெக்டரும், பெங்களூரு நகர போலீசாரும் தடை விதித்து உள்ளனர்.
தற்போது நடப்பது பொது தேர்தல் அல்ல. பெங்களூரு ஆசிரியர் தொகுதி வாக்காளர்களாக பெண்கள் 10,106 பேரும்; ஆண்கள் 5,592 பேரும்; திருங்கையர் ஐந்து பேர் என மொத்தம் 16,063 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
மதுபான விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால், மனுதாரர்களின் வர்த்தகம் பாதிக்கப்படும். எனவே, ஓட்டுப்பதிவு நடக்கும் பிப்., 16ம் தேதி மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் பிப்., 20ம் தேதி ஆகிய நாட்களில் மட்டும் காலை 6:00 முதல் நள்ளிரவு வரை தடை விதிக்கலாம்.
எனவே, மாவட்ட கலெக்டர் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்