தடதடவென வேகமெடுக்கும் ஒரு மோட்டார் சைக்கிளில் நௌஷத் கானும் அவரின் மகனான சர்ஃபராஸ் கானும் மாலை நேரமாகக் கிளம்பி விடுவார்கள். மோட்டார் சைக்கிளில் நௌஷத் கானுக்கு முன்பாக ஒரு பெரிய மூட்டை இருக்கும். நௌஷத்துக்கும் சர்ஃபராஸூக்கும் இடையில் ஒரு மூட்டை இருக்கும்.
சர்ஃபராஸின் தோளில் ஒரு மூட்டை இருக்கும். அது எல்லாமே டிராக் பேன்ட்டுகள். மும்பை நகர வீதிகளில் டிராக் பேன்ட்டுகள் விற்பதுதான் அவர்களின் வேலை. நௌஷத்தின் அலுவலக வேலைகளுக்கும் சர்ஃபராஸின் கிரிக்கெட் பயிற்சிக்கும் இடையில் மிஞ்சியிருக்கும் நேரத்தில் அவர்களின் வழக்கம் இதுதான்.
“நாங்கள் குடிசைகளிலிருந்துதான் வந்தோம். அங்கே கழிப்பறையைப் பயன்படுத்தவே பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். பின்னால் நிற்பவர்கள் என் மகனின் தலையில் தட்டி ஓரம் தள்ளி முன்னால் சென்றதையெல்லாம் பார்த்திருக்கிறேன். நாங்கள் அப்படியான இடத்திலிருந்துதான் வந்திருக்கிறோம்!” – சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் நௌஷத் கான் இப்படி கூறியிருப்பார்.

கடினமான சூழல்களை எதிர்கொண்டு ரத்தத்தோடு சேர்த்து வியர்வையையும் உதிர்க்கிற இதயங்களுக்கு மனஉறுதி எப்போதும் அதிகமாகவே இருக்கும். நௌஷத்தும் சர்ஃபராஸூம் மும்பையில் போராடியதற்கான அறுவடையாகத்தான் ராஜ்கோட் டெஸ்ட் அமைந்திருக்கிறது.
அனில் கும்ப்ளே கையில் சர்ஃபராஸ் தொப்பியை வாங்குகிறார். இந்தக் காட்சியை கண்டு நௌஷத் கண்ணீர் சிந்துகிறார். ராஜ்கோட்டின் பச்சை பசேல் புற்களை நனைத்த அந்தக் கண்ணீருக்குள் இருக்கும் வலியும் கனவும் தங்களின் எல்லைகளை மீறி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு சராசரி இந்திய குடும்பத்தின் லட்சியம்.
“கிரிக்கெட் ஜெண்டில்மேன்களின் ஆட்டம் மட்டுமல்ல. அது எல்லாருக்குமான ஆட்டம்!” மைதானத்திற்கு வருகை தந்திருந்த நௌஷத் கானின் டீசர்ட்டில் பொறிக்கப்பட்டிருந்ந்த வாசகம் அது. தனது மகனின் மீது கரியர் முழுவதும் வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களுக்கான பதிலடி இது.
சர்ஃபராஸ் கானின் இந்திய அறிமுகத்திற்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவில் ஐ.பி.எல் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு, இந்திய அணிக்கான வீரர்களின் தேர்வு என்பதுமே பாரபட்சமே இல்லாமல் ஐ.பி.எல் வழியாக மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்தது. உள்ளூர் போட்டிகளில் திறனை வெளிக்காட்டி அதன்மூலம் இந்திய அணியின் கதவைத் தட்ட வேண்டும் என்கிற ரோட் மேப் முற்றிலும் மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் ஆடி ஐ.பி.எல் தொடரில் ஓர் அணிக்குத் தேர்வாகி அங்கு நன்றாக ஆடி இந்திய அணிக்குத் தேர்வாகிவிட வேண்டும் என்பதே வீரர்களின் மனநிலையாகவே இருக்கிறது. ரெட் பால் கிரிக்கெட்டிலும் இதே தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுவதுதான் வேதனை. சுனில் கவாஸ்கர் போன்ற மூத்த வீரர்களே இந்தப் புதிய வழக்கத்தைக் கடுமையாகச் சாடியிருக்கின்றனர்.

‘ஐ.பி.எல் பெர்ஃபார்மென்ஸை வைத்துதான் டெஸ்ட் அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வீர்கள் எனில் ரஞ்சி போட்டிகளை எதற்கு நடத்துகிறீர்கள்?’ பிசிசிஐ மீதான கவாஸ்கரின் சாட்டையடி இது.
சர்ஃபராஸ் கான் இந்தப் புதிய வழக்கத்திலிருந்து வேறுபட்டவர். அவரின் தேர்வு முழுக்க முழுக்க அவரின் ரஞ்சி போட்டிகளின் செயல்பாடுகள் அடிப்படையில் அமைந்ததே. ஐ.பி.எல்-லை முன்னிலைப்படுத்தும் தேர்வு முறைக்குள் சிக்கி தனக்கான இடத்தைப் பிடித்துக்கொள்ள அவர் கடினமான காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். 17 வயதிலேயே ஐ.பி.எல் இல் 360* டிகிரி ஷாட்களை ஆடி மிரளவைத்தார். ‘உன் வயசுல எனக்கு இவ்ளோ திறமை இருந்ததே இல்ல…’ என டிவில்லியர்ஸே ஆச்சர்யப்பட்டார். இவரின் அதிரடியைப் பார்த்து விராட் கோலியே தலைவணங்கி வணக்கம் வைத்தார். ஆனாலும், ஒரு விமர்சனம் மட்டும் அவரைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.
சர்ஃபராஸ் டி20 க்களுக்கான வீரர். அவர் ரெட்பாலுக்கு செட்டே ஆகமாட்டார் என கூறினர். இதனால் ரஞ்சி போட்டிகளில் மும்பை அணியில் சர்ஃபராஸூக்கான இடமும் கிடைக்கவில்லை.
மகனைப் பெரிய ஆளாக ஆக்கிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றிய நௌஷத் கான் அவரை உத்தரப்பிரதேச அணிக்காக ஆடச் சொல்லி அங்கே அழைத்து செல்கிறார். ஆனால், அங்கேயும் அவருக்கு முறையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மூன்று சீசன்களில் எட்டு போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். அப்பா – மகன் இருவருக்குமே விரக்தியும் கோபமும் மேலோங்கியிருந்தது.

இந்தச் சமயத்தில்தான் இக்பால் அப்துல்லா சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வும் நௌஷத் கானின் மீது இடியாக விழுகிறது. ஐ.பி.எல்-இல் கொல்கத்தா அணிக்காக ஆடிய இக்பால் அப்துல்லாவை அனைவருக்குமே தெரியும். அவரிடம் கிரிக்கெட் ஆடும் திறன் இருக்கிறது என்பதை அறிந்து அவருக்குப் பயிற்சியளித்து உதவியாக நின்று 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் ஆடக் காரணமாக இருந்தவர் நௌஷத் கான்.
அந்த இக்பால் அப்துல்லா ஒரு கருத்து மோதலில், “நான் என் திறமையால் இந்த இடத்தை எட்டியிருக்கிறேன். உங்களால்தான் எல்லாம் நடந்ததெனில் நீங்கள் உங்கள் மகனை இந்திய அணிக்கு ஆட வைத்துக் காட்டுங்கள்!” என சர்ஃபராஸின் நெஞ்சில் வஞ்சக நகத்தினால் கீறினார். இதன்பிறகுதான் அவரின் நெஞ்சில் இன்னும் தீரமாக லட்சிய நெருப்பு பற்றிக் கொண்டது.
உத்தரப் பிரதேசத்திலிருந்து மும்பைக்கு மாறினார் சர்ஃபராஸ் கான். நீண்ட காத்திருப்புக்கு பின் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. கிடைத்த வாய்ப்பை சர்ஃபராஸ் நன்றாகவும் பயன்படுத்திக் கொண்டார்.
2019-20 சீசனில் 150+ ஆவரேஜோடு 928 ரன்களை எடுத்திருந்தார். 2021-22 சீசனில் 120+ ஆவரேஜோடு 982 ரன்களை அடித்திருந்தார். 2022-23 சீசனில் 92 ஆவரேஜோடு 556 ரன்களை அடித்திருந்தார்.

சதம், இரட்டைச்சதம், முச்சதம் என அடித்து அதகளப்படுத்தினார். பிராட்மேனுக்குப் பிறகு முதல் தரப் போட்டிகளில் அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் வீரர் எனும் பெருமையை பெற்றார். யார் யாருக்கோ திறந்த இந்திய அணியின் கதவுகள் சர்ஃபராஸூக்கு மட்டும் திறக்கவில்லை. ஒரு ரஞ்சி போட்டியில் சதத்தை அடித்துவிட்டு தேர்வாளர்களை நோக்கி ஆவேசமாக கை நீட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். சர்ஃபராஸ் அப்படித்தான்! அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. விரக்தியில் சிலரை சீண்டும்விதத்தில் தன்னுடைய ரெக்கார்டுகளை உலகுக்குக் காட்டும் வகையில் தானே சமூகவலைதளங்களில் போஸ்ட்டுகளைப் போட்டுக்கொள்வார். எதிரணிகளிடம் கரடுமுரடாக நடந்துக் கொள்வார். இவர் பிரச்னைக்குரிய ஆள் எனும் பிம்பம் ஆரம்பத்திலிருந்தே சர்ஃபராஸைத் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாததற்கும் இதுதான் முக்கிய காரணமெனவும் கூறப்பட்டது. ஆனாலும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவருக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
தற்போது தவிர்க்கவே முடியாமல் இந்திய அணியின் கதவுகள் திறந்திருக்கின்றன. அதை சர்ஃபராஸூம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் வகையில் நல்ல ஆட்டத்தை ஆடி வருகிறார்.
இந்திய அணிக்கான நுழைவுவாயில் ஐ.பி.எல்தான் எனும் வழியை சர்ஃபராஸ் உடைத்திருக்கிறார். அவரின் வருகையால் ரஞ்சி போட்டிகளின் மீதான மதிப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

“இவ்ளோ தூரம் வந்துட்டு நாம தோத்தாலும் பரவால்லப்பா….நம்மக்கிட்ட இழக்கிறதுக்கு எதுவும் இல்ல. நாம திரும்பவும் டிராக் பேன்ட் விற்கப் போனாலும் எனக்கு ஒண்ணும் இல்ல…” என சர்ஃபராஸ் ஒரு கட்டத்தில் தன் தந்தையைத் தேற்றியிருக்கிறார். ஆனால், இப்போது அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே வேண்டாம். டிராக் பேண்டுகள் விற்ற அதே வீதிகளில் இருவரும் பெருமிதமாக ஒரு நடையைப் போடலாம்!