நியூயார்க்,
தன் சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல் அளித்த வழக்கில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு, நீதிமன்றம் 3,000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர், அதிபராவதற்கு முன், தொழிலதிபராக இருந்தவர்.
இவருக்கு சொந்தமான ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவங்கள் உள்ளன.
வணிக நிறுவனத்தில் அவரது மகன்களான ஜூனியர் டிரம்ப், எரிக் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் டிரம்ப், வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக தன் சொத்து மதிப்பை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தன் மீதான குற்றச் சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக, தன் சொத்து மதிப்புகளை டிரம்ப் மோசடியாக உயர்த்திக் காட்டிய குற்றச்சாட்டு உறுதியானது. குற்றவாளியான இவர், 3,000 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். நியூயார்க் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.
டிரம்பின் மகன்களான எரிக் மற்றும் டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஆகியோருக்கும் தலா, 33.19 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
”இது என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தொடரப்பட்ட வழக்கு,” என தெரிவித்துள்ள டிரம்ப், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்