மாஸ்கோ, ரஷ்யாவில், மர்மமான முறையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் தலை மற்றும் மார்பு பகுதிகளில் காயம் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில், பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி, 47, அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளர். இவர், அதிபர் புடினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்ததை அடுத்து, மக்களிடையே பிரபலமானார்.
கடந்த 2020ல், விமானத்தில் சென்ற போது, நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் விஷ அமிலம் அலெக்ஸி நவால்னிக்கு செலுத்தப்பட்டதை அடுத்து மயங்கி விழுந்தார்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தீவிர சிகிச்சை பெற்ற அவர், 2021 ஜனவரியில் ரஷ்யா திரும்பினார். இதையடுத்து, பல்வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சைபீரியாவில் உள்ள ஆர்டிக் சிறையில் அலெக்ஸி நவால்னி அடைக்கப்பட்டார்.
கடந்த 16ம் தேதி, சிறையில் இருந்த போது, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அலெக்ஸி நவால்னி உயிரிழந்ததாக, ரஷ்ய அரசு அறிவித்தது.
ரஷ்யாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இவரது மரணத்துக்கு, ரஷ்ய அதிபர் புடின் தான் காரணம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
சலேகார்ட் மாவட்ட மருத்துவமனைக்கு, 17ம் தேதி, அலெக்ஸி நவால்னியின் உடல் எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘அலெக்ஸி நவால்னியின் தலை மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் இருந்தன. ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால், மற்றவர்கள் அவரைப் பிடிக்க முயலும் போது சிராய்ப்பு ஏற்படும்.
‘ஆனால் இந்த காயங்கள் வலிப்பால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், அவருக்கு ஏன் மாரடைப்பு ஏற்பட்டது என்பது பற்றி யாரும் எதுவும் கூறவில்லை’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்