புதுடில்லி :பா.ஜ., – எம்.பி., சுகந்தா மஜும்தார் அளித்த புகாரின் அடிப்படையில், மேற்கு வங்க தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி., உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகும்படி லோக்சபா உரிமைக்குழு அளித்த நோட்டீசுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தின், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினரின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
வன்முறை
இதனால், சந்தேஷ்காலியில் பதற்றம் நிலவுகிறது. தொடர் வன்முறை சம்பவங்கள் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ., – எம்.பி., சுகந்தா மஜும்தார், சந்தேஷ்காலிக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க முயன்றார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு பா.ஜ., தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில், எம்.பி., மஜும்தார் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
இது தொடர்பாக, லோக்சபா உரிமைக்குழுவில் மஜும்தார் புகார் அளித்தார். இதையடுத்து மேற்கு வங்க தலைமை செயலர் பகவதி பிரசாத் கோபாலிகா, டி.ஜி.பி., ராஜிவ் குமார், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, லோக்சபா உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து, மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேற்கு வங்க அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆஜராகினர்.
நடவடிக்கை
”பார்லிமென்ட் உறுப்பினர் சபை நடவடிக்கையில் ஈடுபடும் போது அவரை கடமையாற்ற விடாமல் தடுத்தால் மட்டுமே உரிமைக்குழு தலையிட முடியும். அவரது அரசியல் நடவடிக்கைக்கு சிறப்புரிமை கோர முடியாது,” என, கபில் சிபல் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், லோக்சபா உரிமைக்குழு பிறப்பித்த நோட்டீசுக்கு தடை விதித்தனர்.
இதற்கிடையே, சந்தோஷ்காலி விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
பாதிக்கப்பட்ட பெண்கள் எதுவும் பேசிவிடாமல் இருப்பதற்காக, அவர்களது குரல்களை ஒடுக்குவதற்கு திரிணமுல் காங்கிரஸ் அரசு முயற்சிக்கிறது. பெண்களை கொடுமைப்படுத்திய ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட வேண்டும். ஏராளமான பெண்கள் அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
ரேகா சர்மா
தலைவர், தேசிய மகளிர் ஆணையம்
குரல்களை ஒடுக்க முயற்சி!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்