அரச சொத்துக்களை பலவந்தமாக சுவீகரிப்பது தொடர்பில் பொலிஸாரும் புகையிரத திணைக்களமும் சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதாகவும், அதற்கிணங்க ரயில்வே கட்டளைச் சட்டத்தின்படி, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை தரைமட்டமாக்கும் உரிமை புகையிரத திணைக்களத்திற்கு உண்டு என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணி பகிர்வு தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை 10 வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கும் நபர்களுக்கான புதிய மதிப்பீட்டின் பிரகாரம் இவ்வருடத்தில் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் மீளப்பெறுவதற்கும், 10 வருடங்களுக்கும் குறைவாக ரயில்வே காணிகளில் அனுமதியின்றி குடியிருப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை பயனுடையதாகவும், வினைத்திறனுடையதாகவும் பயன்படுத்துவதற்கு, வெளிப்படையான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்து, ‘Station Plaza’ என்ற பெயரில் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அனுமதியைப்; பெற்ற பின்னர், நீண்ட கால குத்தகை அடிப்படையில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மதிப்பீடுகள் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்படுமேயொழிய, அமைச்சரவையின் அங்கீகாரமின்றி அல்லது அமைச்சரின் தேவைக்கேற்ப காணிகளை விநியோகிப்பதை, தான் அரமச்சராக இருக்கும் வரை அனுமதிக்கமாட்டேன் என்றும் அவர் மேலும் இங்கு வலியுறுத்தினார்.