சௌராஷ்ட்ரா அணியை வீழ்த்தி ரஞ்சி கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி தமிழ்நாடு அணி சாதித்திருக்கிறது.

ரஞ்சி கோப்பைத் தொடரின் காலிறுதிப்போட்டிகள் நடந்து வருகிறது. 2016-17 சீசனுக்கு பிறகு முதல் முறையாக நாக் அவுட்டிற்கு முன்னேறியிருந்த தமிழக அணி காலிறுதியில் சௌராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டிருந்தது. இந்தப் போட்டி கடந்த 23 ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கியிருந்தது. சௌராஷ்ட்ரா அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. தமிழ்நாடு அணியின் சார்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். முதல் இன்னிங்ஸில் தமிழக அணி சிறப்பாக பேட்டிங்கும் ஆடியிருந்தது. இந்திரஜித் நிலைத்து நின்று 80 ரன்களைச் சேர்த்திருந்தார்.

சாய் கிஷோரும் பூபதி குமாரும் தங்கள் பங்குக்கு அரைசதங்களை அடித்திருந்தனர். இதன் விளைவாக தமிழ்நாடு 155 ரன்கள் முன்னிலையைப் பெற்றது. சௌராஷ்ட்ரா இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. இதிலும் சௌராஷ்ட்ரா சொதப்பவே செய்தது. தோல்வியைத் தவிர்க்க புஜாரா மட்டும் போராடினார்.
170 பந்துகளை எதிர்கொண்டிருந்த புஜாராவை சாய் கிஷோர் வீழ்த்தினார். இந்த இன்னிங்ஸிலும் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

முன்னதாக, லீக் சுற்றில் தமிழ்நாடு அணி ரெயில்வேஸ், சண்டிகர், கோவா, பஞ்சாப் ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்தது. கர்நாடகா,திரிபுரா ஆகிய அணிகளுக்கு எதிராக ட்ரா செய்திருந்தது. குஜராத்துக்கு எதிராக மட்டும் வீழ்ந்திருந்தது.
இப்போது 2016 – 17 சீசனுக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. விஜய் ஹசாரே,சையத் முஷ்தாக் அலி தொடர்களில் தமிழ்நாடு அணி எப்போதுமே சாதிக்கும். சிறப்பாக ஆடும். ஆனால், ரஞ்சி போட்டிகளில் தமிழ்நாடு அணி திணறவே செய்யும். 1954, 1987-88 என இதுவரை இரண்டே இரண்டு முறை மட்டுமே ரஞ்சி கோப்பையை தமிழ்நாடு அணி வென்றிருக்கிறது. கடைசியாக ரஞ்சி கோப்பையை வென்று 36 வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை வருட நீண்ட கால ஏக்கத்தை தீர்க்கும் வாய்ப்பை நோக்கி தமிழ்நாடு அணி நெருங்கிக் கொண்டிருக்கிறது.