அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு, ஞானவாபி மசூதியில் இந்துக்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துப் பெண்கள் தாக்கல்செய்த இரண்டாண்டுகளுக்கு முந்தைய மனுவில், வாரணாசி நீதிமன்றம் அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த வழக்கில் வலதுசாரி தரப்பினர், காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டிருப்பதாக வாதத்தை முன்வைக்கின்றனர்.

ஆனால், அப்படி எதுவும் இல்லை என மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், மசூதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளுமாறு இந்திய தொல்லையில் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆராய்ச்சி மேற்கொண்ட இந்திய தொல்லையில் துறை, `ஞானவாபி வளாகத்தில் உள்ள தற்போதுள்ள கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு ஓர் இந்து கோயில் இருந்தது. அரபு பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு கல்வெட்டில் மசூதி ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில், அதாவது 1676 முதல் 1677-ம் ஆண்டுக்கு இடையே கட்டப்பட்டிருக்கிறது’ என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதையடுத்து, கடந்த ஜனவரி 31-ம் தேதியன்று, “மசூதி வளாகத்தின் ‘வியாஸ் தெஹ்கானா’ பகுதியில் இந்துக்கள் வழிபட அனுமதிக்கப்படுகிறது. 7 நாள்களுக்குள் பூஜையைத் தொடங்கலாம்” என நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டபடியே, ஒரு வாரத்துக்குள் மசூதியில் இந்துக்கள் பூஜையும் நடத்தினர். அதேசமயம், வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பிப்ரவரி 2-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனுத்தாக்கல் செய்தது. இதில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், பிப்ரவரி 15-ம் தேதியன்று தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று காலை தீர்ப்புக்கு வந்தது. அப்போது, மசூதியின் வியாஸ் தெஹ்கானா பகுதியில் இந்துக்கள் வழிபடலாம் என்ற வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மசூதி நிர்வாகம் தாக்கல்செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. அதன் பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே பேசிய இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், “ஞானவாபி வளாகத்தின் வியாஸ் தெஹ்கானாவில் நடந்து கொண்டிருக்கும் பூஜை தொடரும்” என்று தெரிவித்தார்.