அழைத்த பிசிசிஐ… மறுப்பு தெரிவித்த இஷான் கிஷன் – ஒப்பந்ததில் இருந்து தூக்க இதுவும் காரணமா?

Ishan Kishan: இந்திய வீரர்களின் மத்திய ஒப்பந்தப் பட்டியல் கடந்த சில நாள்களுக்கு முன் பிசிசிஐயால் வெளயிடப்பட்டது. A+, A, B, C என நான்கு தரவரிசைகளின்படி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். A+ தரவரிசையில் இடம்பிடித்த வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், A தரவரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு 5 கோடி ரூபாயும், B தரவரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு 3 கோடி ரூபாயும், C தரவரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு 1 கோடி ரூபாயும் வழங்கப்படும். 

2023-24ஆம் ஆண்டுகளுக்கான ஒப்பந்தப் பட்டியல் இருந்து முக்கிய வீரர்கள் பலர் நீக்கப்பட்டனர். கடந்தாண்டு ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த செதேஷ்வர் புஜாரா, ஷிகர் தவாண், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சஹால், தீபக் ஹூடா ஆகியோரும் நடப்பு அணியில் நட்சத்திர வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் அதிரடியாக நீக்கப்பட்டது பல விவாதங்களை கிளப்பியது. 

சர்வதேச போட்டிகளில் விளையாடாத நேரத்தில் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்நாட்டு தொடரான ரஞ்சி டிராபியில் தங்களின் மாநில அணிக்காக விளையாடும்படி பிசிசிஐயால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இஷான் கிஷன் ஜார்க்கண்ட் அணி சார்பில் விளையாடாத நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதுகு பிடிப்பை காரணம் காட்டி மும்பை அணிக்காக விளையாடவில்லை. ரஞ்சி தொடரில் விளையாடாத நிலையில், அவர்களை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது. 

அதே நேரத்தில், ஹர்திக் பாண்டியா கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச போட்டிகளிலோ அல்லது உள்ளூர் போட்டிகளிலோ விளையாடவில்லை. குறிப்பாக, காயத்தில் இருந்து மீண்ட பின்னரும் தனிப்பட்ட ரீதியில் பயிற்சியில் ஈடுபட்ட அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பெங்களூரு என்சிஏவில் தனது உடற்தகுதியை அவ்வப்போது நிரூபித்த நிலையிலும், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவர் பெரிதாக கவனம் செலுத்தாத காரணத்திலும் அவரை ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கவில்லை என கூறப்பட்டது. 

அதுமட்டுமின்றி, ஹர்திக் பாண்டியா தான் சர்வதேச போட்டிகளில் விளையாடாத நேரங்களில், முதல் தர போட்டிகளில் விளையாடுவதாக பிசிசிஐக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவரை ஒப்பந்தத்தில் பிசிசிஐ நீட்டித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஹர்திக் பாண்டியா உடன் பரோடாவில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நட்சத்திர வீரரான இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க பிசிசிஐக்கு வேறு காரணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அணி நிர்வாகம் இஷான் கிஷனை தொடர்பு கொண்டது என்றும் ஆனால் அவர் இன்னும் தயாராக இல்லை என்றும் பதிலளித்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட பிசிசிஐ அவரை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியிருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர். 

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. கடைசி போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இப்போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.