சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்காக ஆஜராக மாட்டோம்: புதுச்சேரி வழக்கறிஞர்கள்

புதுச்சேரி: சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்காக ஆஜராக மாட்டோம் என்று புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் சிறுமியின் கொடூர மரணத்துக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில், காவல் துறையானது உரிய வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த கொடுங் கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக புதுவையில் உள்ள வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என்று முடிவு எடுத்து உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் கொலைசெய்யப்பட்டு, கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்தாள். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(56) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல், பாப்பம்மாள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, உடல் அடக்கம் செய்வதற்காக சிறுமியின் இல்லத்தில் இருந்து மயானத்துக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். 10 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மயானத்தை அடையும் முன்பாக வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர். | முழுமையாக வாசிக்க > புதுச்சேரி | புத்தக பை, பொம்மையுடன் சிறுமியின் உடல் நல்லடக்கம் – ஊரே ஒன்று திரண்டு கண்ணீர் அஞ்சலி

இதனிடையே, புதுச்சேரி பந்த் போராட்டத்தில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேருவும் அழைப்பு விடுத்துள்ளார். அதன் விவரம்: புதுச்சேரி பந்த்: அரசு ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ விடுத்த அழைப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.