“அரசு குறித்த கருத்துக்காக பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்வதா?” – இபிஎஸ் கண்டனம்

சென்னை: “உன்னத நோக்கத்தில் ஒர் ஆசிரியர் தனது கருத்தைக் கூறினால், அதனை ஆய்ந்து அதன்படி சீர்செய்வதை விட்டுவிட்டு, அவரை இடைநீக்கம் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெற்றோருக்குப் பிறகு ஆசிரியப் பெருமக்களை குருவாக நிறுத்தி, பிறகுதான் தெய்வத்தை நமது முன்னோர்கள் வரிசைப்படுத்தினார்கள். அதிமுக ஆட்சியில், எதிர்கால சந்ததியினரை நல்லவர்களாக, வல்லவர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கும், கல்வி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே ஆசிரியப் பெருமக்களுக்கு அறிவித்த எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், ஆசிரியை உமா மகேஸ்வரி என்பவர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு கட்டுரைகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். அவற்றில் ஊடகம் சார்ந்த ஒரு வலைதளத்தில் கல்வித் துறையில் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 1200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருப்பதாகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட 3,200 கோடி ரூபாய் அடிப்படை கட்டமைப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளதாகவும், ஆனால், ஆசிரியர் பணி நியமனம் குறித்த அறிவிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், இல்லம் தோறும் கல்வி திட்டத்துக்கு பல நூறு கோடி ரூபாய் வீணாக செலவழிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால் கல்வி மேம்பாடு சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், அவரை திமுக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்” என்ற குறளுக்கேற்ப, பணியில் இருந்த ஆசிரியை உமா மகேஸ்வரி, தமிழகக் கல்விப் பணி சிறக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தனது கருத்தைக் கூறினால், அதனை ஆய்ந்து அதன்படி சீர்செய்வதை விட்டுவிட்டு, அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.