நடிகர் சங்கத்திற்கு கமல் நிதியுதவி: விஷால் நன்றி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. ஆனால், இன்னமும் முடியாமல் இருக்கிறது. சில சர்ச்சைகள், தேர்தல் குறித்த வழக்குகள் என தாமதமாகி மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் சங்க கட்டடப் பணிக்கான வைப்பு நிதியாக நடிகர் கமல்ஹாசன் நேற்று ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அதை நடிகர் சங்க செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால், “இந்தியத் திரையுலகத்தின் அன்பான நினைவுச்சின்னம் கமல்ஹாசன் சார். நேற்று என்ன நடந்தது என்பதை மதிப்பிடுவதற்கு வார்த்தைகளோ, இடமோ, பெரிதுபடுத்தவோ முடியாது. நான், கார்த்தி, பூச்சி முருகன் சார் உங்களை சந்தித்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோடிக்கான காசோலையைக் கொடுத்து இதை ஆரம்பித்து வைத்தீர்கள். தற்போது மீண்டும் அதைச் செய்து தொடர்ந்து ஆதரிக்கிறீர்கள். எங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பதற்கு நன்றி சார். திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கும் சராசரி மனிதனாக உதவி செய்கிறீர்கள்.

உங்களுடன் நேற்று செலவிட்ட அந்த ஒரு மணி நேரம் ஹார்டுவேர்டு வளாகத்தில் இருந்தது போல இருந்தது. பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். புதிய கட்டடத்தில் ஆர்வமுள்ள கலைஞர்கள் பலருக்கும் இந்த நினைவுகள் பகிரப்பட வேண்டும் என நினைக்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் சார். கடுமையான உழைப்பு தோல்வியடைவதில்லை. அதற்கு நீங்கள் ஒரு சான்று,” என்று பாராட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.