ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்ஷூரன்ஸ் (Star Health and Allied Insurance) நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இதுவரை ஒரு கோடி இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கி இந்தியாவிலேயே முதல்முறையாக சாதனை படைத்துள்ளது ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம்.

2006-ம் ஆண்டில் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இருந்து கடந்த சுமார் 18 ஆண்டுகளில் ஒரு கோடி ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கியுள்ளது. இதற்கு முன் இந்தியாவில் எந்தவொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் ஒரு கோடி க்ளெய்ம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கியதில்லை.
இந்த ஒரு கோடி க்ளெய்ம்களுக்காக சுமார் 44,000 கோடி ரூபாயை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் விடுவித்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 877 கிளைகள் இருக்கின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக க்ளெய்ம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அதிக க்ளெய்ம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 18 ஆண்டுகளில் 14 சதவிகித க்ளெய்ம் செட்டில்மெண்ட் சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைத்துள்ளது. 61 சதவிகித செட்டில்மெண்ட் வயது வந்தவர்களுக்கும், 25 சதவிகித செட்டில்மெண்ட் சிறுவர்களுக்கும் கிடைத்துள்ளது.
நோய்களை பொறுத்தவரை காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களுக்கே அதிக க்ளெய்ம்கள் வந்துள்ளன. செலுத்தப்பட்ட செட்டில்மெண்ட்களில் 20 சதவிகிதம் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளன.

2008-ம் ஆண்டுக்குப் பின், நோயாளிகள் மருத்துவமனைகளில் தங்கும் சராசரி காலம் குறைந்துவிட்டது. ஆனால், கேட்கப்படும் க்ளெய்ம்களின் சராசரி அளவு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் பணவீக்கமும், மருத்துவச் செலவுகள் அதிகரித்திருப்பதும்தான்.
கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் துறையில் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 33 சதவிகித சந்தைப் பங்குடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுமார் 14,200-க்கும் மேற்பட மருத்துவமனைகளுக்கு இந்த நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. மேலும், பெரும்பாலான க்ளெய்ம்களுக்கு 2 – 3 மணி நேரத்துக்குள் செட்டில்மெண்ட் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.