பொக்ரான்: பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் திறனை எடுத்துக்காட்டும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடக்கும் முப்படை வீரர்கள் நடத்தும் ஒத்திகையை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், முப்படைகளின் ஒத்திகை நடைபெற்றது. இதற்கு ‛ பாரத் சக்தி’ என பெயரிடப்பட்டு உள்ளது. தன்னிறைவு இந்தியா திட்டத்தை எதிரொலிக்கும் வகையிலும், இந்தியாவின் திறமையை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த ஒத்திகை நடந்தது.
இதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள் இந்த கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. டி- 90(ஐஎம்) டாங்குகள், தனுஷ் மற்றும் சாரங் துப்பாக்கி, ஆகாஷ் ஆயுத அமைப்புகள், ராணுவ வாகனங்கள் இந்திய கடற்படையின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், வானில் உள்ள இலக்குகளை குறிவைக்கும் ஆயுதங்கள், விமானப்படையின் இலகு ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன.
முப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ள இந்த ஒத்திகையை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அவருடன் 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த ஒத்திகையை பார்வையிட்டனர். பீரங்கி, ஏவுகணைகள், ஆயுதங்களை முப்படையினர் பயன்படுத்தினர்.
இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் அணுசக்தி திறன் பொக்ரானில் தான் வெளிப்பட்டது. இன்று, உள்நாட்டின் திறனை எடுத்துக்காட்டுகிறது. முப்படை வீரர்களின் திறமை, வானில் உறுமல், களத்தில் போர், அனைத்து திசைகளிலும் வெற்றி எதிரொலிக்கும் சத்தத்தை நாம் கேட்டோம். இதுதான் புதிய இந்தியா.
வளர்ச்சியடைந்த நாடாக நமது நாட்டை மாற்றுவதற்கு, நாம் பிற நாடுகளை சார்ந்துள்ளதை குறைக்க வேண்டும். இதனால், சமையல் எண்ணெய் முதல் நவீன போர் விமானங்கள் வரை தன்னிறைவு இந்தியாவிற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
நேற்று, எம்ஐஆர்வி தொழில்நுட்பம் கொண்ட அக்னி – 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இந்த அதிநவீன தொழில்நுட்பம் உலகின் சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கிய முக்கியமான நடவடிக்கை இதுவாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி இரண்டு மடங்காகி உள்ளது. இதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பாதுகாப்புத்துறையில் 150 ஸ்டார்ட் அப்கள் உருவாகி உள்ளன. 1,800 கோடி மதிப்பு ஒப்பந்தங்களை அவர்களுக்கு பாதுகாப்புத்துறை வழங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்