நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள பரியூர் என்ற கிராமத்தில் மகேந்திரா பிக்கப் வேன் வாகனம் கவிழ்ந்து மிளகுப் பறிக்க சென்ற 6 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, தேவானூர் நாடு ஊராட்சி பரியூர் என்ற கிராமத்தில் இருந்து புதன்கிழமை காலை மிளகு பறிக்க மகேந்திரா பிக்கப் மினி வேன் வாகனத்தில் பெண்கள், ஆண்கள் என சுமார் 23 சென்றனர். பணியை முடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் திரும்பிய போது அங்குள்ள கொண்டை ஊசி வளைவில் மினி வேன் திரும்பும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 23 பேரும் காயமடைந்தனர். அதில் படுகாயம் அடைந்த 6 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு வாழவந்தி நாடு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
