மும்பையில் உள்ள ஜெ.ஜெ அரசு மருத்துவமனை மிகவும் பிரபலமாகும். இந்த மருத்துவமனைக்குள் திரைப்படம் ஒன்றுக்கு 10 நாள்கள் படப்பிடிப்பு நடத்த படத்தயாரிப்பு நிறுவனம் மாநில சுகாதாரத்துறையிடம் அனுமதி வாங்கியிருந்தது. அதோடு போலீஸாரிடமும் தடையில்லா சான்று வாங்கியிருந்தடது. இப்படத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். நேற்று காலையில் நடிகை தமன்னா உட்பட அனைத்து நடிகர்களும் மருத்துவமனைக்கு வந்து படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தனர். அரசு மருத்துவமனைக்குள் சினிமா படப்பிடிப்பு நடப்பது குறித்து யாரோ மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். உடனே சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் முஸ்ரீஃப், ஜெ.ஜெ மருத்துவமனை டீன், டாக்டர் பல்லவியைத் தொடர்புகொண்டு உடனே படப்பிடிப்பை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தும்படி மருத்துவமனை டீன் பல்லவி கேட்டுக்கொண்டார். இது குறித்து டாக்டர் பல்லவி கூறுகையில், “சுகாதாரத்துறையின் ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையில் நாங்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தோம். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சுகாதாரத்துறையிடமிருந்து வந்த கடிதத்தில் படப்பிடிப்பை உடனே நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதையடுத்து உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டோம்” என்றார்.
இது குறித்து படத்தயாரிப்பு நிறுவன மேலாளர் மதீன் கான் கூறுகையில், “சுகாதாரத்துறை மற்றும் போலீஸாரிடம் படப்பிடிப்பு நடத்த அனுமதி மற்றும் தடையில்லா சான்று வாங்கி இருந்தோம். திடீரென படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறுகின்றனர். மருத்துவமனையில் படப்பிடிப்புக்காக கோர்ட் செட் அமைத்திருந்தோம். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் எங்களுக்கு இரண்டு கோடி ருபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் தயாரிப்பு நிறுவனம் அனைத்தையும் எடுத்துச் சென்றது.

மீண்டும் அனுமதி வாங்கி வந்து படப்பிடிப்பு நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். 2004-ம் ஆண்டு அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் நடித்த ஒரு படத்தின் சில காட்சிகள் மும்பை புனித ஜார்ஜ் மருத்துவமனையில் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பின்போது நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவேண்டாம் என்று சுகாதாரத்துறை இயக்குநர் கேட்டுக்கொண்டார். அதன் பிறகு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லை.