Doctor Vikatan: தினமும் பனீர் சாப்பிடலாமா… எவ்வளவு சாப்பிடலாம்…. எந்த நேரத்தில், எப்படி எடுத்துக்கொள்வது சிறந்தது… அதனால் உடல் எடை கூடுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

தினமும் பனீர் சாப்பிடலாம், தவறில்லை. ஆனால், அளவு முக்க்கியம். 50 கிராமை தாண்டாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், தினமும் 30 கிராமுக்கு மேல் பனீர் எடுக்க வேண்டாம். அதற்கு மேல் எடுத்தால் எடை அதிகரிக்கலாம்.
பாலில் இருந்து பெறப்படும் புரதச்சத்து பனீரில் இருக்கிறது. அது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. எப்போதுமே காலை உணவுக்கு பனீர் எடுத்துக்கொள்வது சிறந்தது. இரவு உணவில் எடுப்பதைத் தவிர்க்கலாம்.
பனீரை கடைகளில் வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரித்துப் பயன்படுத்தலாம். பாலைத் திரியவைத்து, அந்தத் தண்ணீரைப் பிரித்தெடுத்து விட்டு பனீர் செய்யலாம். எந்தக் கலப்படமும் இல்லாத ஆரோக்கியமான பனீர் கிடைக்கும். ஆரோக்கியமான உணவுதான் என்றாலும் பனீர் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளாது.
பால் அலர்ஜி, அதாவது லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கும், புரதச்சத்தை செரிக்க இயலாதபடி வயிற்றுப் பிரச்னை உள்ளவர்களுக்கும், ஐபிஎஸ் எனப்படும் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) பாதிப்பு உள்ளவர்களுக்கும் பனீர் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். எனவே, அவர்கள் மிகக்குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

கிட்னி பிரச்னை உள்ளவர்களும் மருத்துவரின் பரிந்துரையோடு அவர் குறிப்பிடும் அளவு பனீர் எடுத்துக் கொள்ளலாம். பனீரிலிருந்து கிடைப்பது தரமான புரதம் என்பதால் அது பிரச்னை ஏற்படுத்தாது.
பால் அலர்ஜி உள்ளவர்கள், பனீர் எடுப்பதற்கு பதிலாக சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் டோஃபு என்கிற பனீரை எடுத்துக்கொள்ளலாம். அதுவும் பனீரை போன்ற சுவையுடன்தான் இருக்கும். மற்றபடி, பனீர் ஏற்றுக்கொள்ளும் என்பவர்கள், அதை டிக்காவாக, கிரேவியாக, சந்தேஷ் எனப்படும் இனிப்பாக…. இப்படிப் பல வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு புரதச்சத்துத் தேவையைப் பூர்த்திசெய்ய பல உணவுகள் உள்ளன. ஆனால், சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு அந்த சாய்ஸ் குறைவு. அந்த வகையில் பனீர் அவர்களுக்கான புரதத்தேவையைப் பூர்த்தி செய்யும் ஆகச் சிறந்த உணவாக இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.