ஹெப்பகோடி, : சிறுமியை சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த வளர்ப்பு தந்தை, பெற்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு ரூரல், ஆனேகல்லின், ஹெப்பகோடியில் வசிப்பவர் மஞ்சுளா, 32. இவருக்கு உதயகுமாருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன், உதயகுமார் இறந்ததால், சிக்கபல்லாபூரின் திப்பேனஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத், 39, என்பவரை மஞ்சுளா, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஹெப்பகோடியில் வசிக்கின்றனர்.
முதல் கணவர் மூலமாக பிறந்த இரண்டு குழந்தைகள் தங்களுடன் இருப்பதை, மஞ்சுளா விரும்பவில்லை; அடித்து துன்புறுத்தினார். 8 வயது சிறுவனை கொடுமைப்படுத்துவதை அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவரை மீட்டனர். தற்போது யஷ்வந்த்பூரில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், 5 வயது சிறுமியை மஞ்சுநாத் துன்புறுத்த துவங்கினார். மனைவியுடன் உல்லாசமாக பொழுது போக்க, சிறுமி இடையூறாக உள்ளதாக நினைத்து அவரை வெறுத்தார். தினமும் சிகரெட் மற்றும் வாட்டர் ஹீட்டரால் சூடு வைத்துள்ளார். இதை தாய் மஞ்சுளாவும் கண்டு கொள்வதில்லை.
நேற்று முன்தினம், தண்ணீர் நிரப்பிய பக்கெட்டை கொண்டு வரும்படி, சிறுமியிடம் மஞ்சுநாத் கூறினார். சிறுமியால் பக்கெட்டை துாக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த அவர், சிறுமியை பக்கெட்டால் மனம் போனபடி தாக்கினார்.
இதை பார்த்து கொதிப்படைந்த அப்பகுதியினர், மஞ்சுநாத்தை அடித்து, துவைத்து ஹெப்பகோடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை அரசு குழந்தைகள் காப்பகத்தில் விட்டுள்ளனர். மஞ்சுநாத், மஞ்சுளா கைது செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement