ஹரியானாவில் முட்டை குழம்பு சமைத்துத் தர மறுத்த காதலியை, காதலன் மதுபோதையில் சுத்தியல் மற்றும் பெல்ட்டால் தாக்கி கொலைசெய்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான தவலின்படி, கொலைசெய்த நபரின் பெயர் லல்லன் யாதவ் (35). பீகார் மாநிலம், மாதேபுராவை சேர்ந்த லல்லன் யாதவ், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மனைவி பாம்பு கடித்து இறந்து பிறகு, டெல்லிக்கு குடிபெயர்ந்தார்.

இப்படியிருக்க கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு, தூய்மை பணியாளரான அஞ்சலி (32) என்ற பெண்ணை லல்லன் யாதவ் சந்தித்திருக்கிறார். பிறகு, இருவரும் ஒன்றாகப் பழக ஆரம்பித்து குருகிராம் பகுதியில் ஒன்றாக வாழ்ந்துவந்தனர். இத்தகைய சூழலில், கடந்த புதன்கிழமை சௌமா கிராமத்தில் ஒரு கட்டட தளத்தில் அஞ்சலி இறந்து கிடந்திருக்கிறார். சடலத்தைக் கண்ட கட்டட பராமரிப்பாளர் உடனடியாகப் போலீஸில் புகாரளித்தார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை ஆரம்பித்தனர். அதோடு, சம்பவ இடத்திலிருந்து சுத்தியல் மற்றும் பெல்ட் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். அதையடுத்து, தலைமறைவாக இருந்த லல்லன் யாதவை பாலம் விஹார் காவல் நிலையக் குழுவினர், டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் கைதுசெய்தனர். பின்னர், போலீஸ் விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டு லல்லன் யாதவ் கொடுத்த வாக்குமூலத்தின்படி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவந்த இருவரும், மார்ச் 10-ம் தேதியன்று பணிக்காக குருகிராம் பகுதியிலிருந்து பணியிடத்துக்கு அழைத்துவரப்பட்டு அங்கேயே தங்கவைக்கப்பட்டனர்.

இதில், கடந்த செவ்வாய்க்கிழமை குடிபோதையிலிருந்த லல்லன் யாதவ், இரவு உணவுக்கு முட்டைக் குழம்பு சமைக்குமாறு அஞ்சலியிடம் கூற, அவரோ அதற்கு மறுத்திருக்கிறார். இதனால், அஞ்சலியிடம் தகராறில் ஈடுபட்ட லல்லன் யாதவ், சுத்தியல் மற்றும் பெல்ட்டால் அவரைக் கடுமையாகத் தாக்கி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். தற்போது, லல்லன் யாதவ் மீது IPC Section 302ன்-படி கொலைவழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.