புதுடெல்லி: ‘டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடையவர்களில் முக்கியமானவர் என்பதால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று (மார்ச் 21) கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ முன்வைத்த வாதங்கள்: ‘மதுபான கொள்கை ஊழல் வழக்கின் முக்கியமானவர் கேஜ்ரிவால். இந்த ஊழலுக்கு விஜய் நாயர் என்பவர் இடைத்தரகராக இருந்து செயல்பட்டுள்ளார்.
கேஜ்ரிவாலின் வீட்டுக்கு அருகே தங்கி இருந்து அவருக்கு நெருக்கமாக விஜய் நாயர் செயல்பட்டுள்ளார். தங்களது மதுபான கொள்கை மூலம் பலனடையும் மதுபான வியாபாரிகளிடம் இருந்து ரூ.100 கோடி பெற்றுத் தருமான கேஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு பெறப்பட்ட பணம், பஞ்சாப் மற்றும் கோவா தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊழல் வழக்கில் ஆம் ஆத்மிக்கு ரூ. 100 கோடி வழங்கப்பட்டதில் தொடர்புடைய பாரத் ராஷ்ட்ர சமிதி எம்எல்சி கவிதா ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கேஜ்ரிவால் சந்தித்து, மதுபான கொள்கை விஷயத்தில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஊழலின் மதிப்பு ரூ.100 கோடி மட்டுமல்ல. லஞ்சம் கொடுத்தவர்கள் அடைந்த பலனும் இதில் சேர்க்கப்பட வேண்டும். மதுபான வியாபாரிகள் அனைவருமே பணம் கொடுத்திருக்கிறார்கள்.
தெற்கு குழுமத்திடம் இருந்து பெறப்பட்ட ரூ.45 கோடி லஞ்சப் பணம் 2021-22-ல் நடந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் பணம் கை மாறி இருக்கிறது. தாங்கள் பணமாக பெற்றதாக கோவா சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே, அரவிந்த் கேஜ்ரிவால் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருக்கிறது.