சென்னை: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது இண்டியா கூட்டணிக்கு சாதகமான தாக்கத்தை கொடுக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதோடு கேஜ்ரிவால் கைதுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் முதல்வர் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“கேஜ்ரிவால் கைது முழுவதும் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது. இண்டியா கூட்டணி அமைவதில் கேஜ்ரிவால் முக்கிய பங்கு வகித்தவர். அவர் இந்த கூட்டணியில் இணையாத வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அழுத்தம் கொடுத்தது. அதனை பொருட்படுத்தாது அவர் இண்டியாவில் இணைந்தார்.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்காத பிஆர்எஸ் கட்சியையும் பாஜக டார்கெட் செய்துள்ளது. கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது எங்களது இண்டியா கூட்டணிக்கு எந்தவித எதிர்வினை தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக சாதகமான தாக்கத்தை அது கொடுக்கும்.
பாஜக அரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆணவ கொலைகள் மற்றும் சாதி, மத ரீதியான அராஜகம் அதிகரித்துள்ளது. பட்டியல் சமூகத்தினர் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.