சினிமாவில் யானை ஆதிக்கம்

விலங்குகளை வைத்து படம் இயக்குவது என்பது சினிமா கண்டுபிடித்த சில ஆண்டுகளிலேயே நடைமுறைக்கு வந்த ஒன்று. தமிழ் சினிமாவை பொறுத்தவரை 'வள்ளி திருமணம்' படத்தில் யானை ஒரு கேரக்டராக நடித்தது. 'சந்திரலேகா' படத்தில் யானை கூட்டத்தையே நடிக்க வைத்தார் எஸ்.எஸ்.வாசன். எம்.ஜி.ஆர் நடித்த 'நல்ல நேரம்' யானைகள் சினிமாவில் மிக முக்கியமான படம்.

பிற்காலத்தில் கமல் நடித்த 'ராம் லக்ஷ்மன்'. ரஜினி நடித்த 'அன்னை ஓர் ஆலயம்', ராம நாராயணனின் 'ஆடிவெள்ளி' உள்ளிட்ட பல படங்களில் யானைகள் நடித்தது. விலங்குகளிலேயே நாயையும், யானையும் நடிக்க வைப்பது சுலபம் என்பார்கள். நாயை என்ன செய்ய சொன்னாலும் செய்யும். யானை பிரேமில் நின்றாலே போதும் என்பார்கள்.

பிற்காலத்தில் பிரபு சாலமன் 'கும்கி' படத்தை எடுத்தார். அதன்பிறகும் பல யானை படங்கள் வந்தது. சமீபத்தில் வெளியான 'போச்சர்' என்ற வெப் தொடர் யானை வேட்டை தொடர்புடையதாக இருந்தது. தற்போது ஒரே நேரத்தில் யானையை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படம் யானையை பின்னணியாக கொண்டது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. பிக்பாஸ் ஆரவ் நடித்த 'ராஜபீமா' என்ற படம் முடிவடைந்தும் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் 'படைத் தலைவன்' படமும் யானையை மையமாக கொண்டு தயாராகிறது. இதற்கு இடையில் நயன்தாரா ஒரு படத்தில் யானை பாகியாக நடிக்கிறார். இன்னும் அறிவிப்புக்கு வராமல் மேலும் சில யானை படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் எந்த யானை ஜெயிக்கபோகிறது என்பது படங்கள் வெளிவந்ததும் தெரியும். யானையை மையமாக கொண்டு உருவான ஆவணப்படமான 'எலிபெண்ட் விஸ்பரஸ்' ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.