20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அணியில் கோலி இடம் பெற வேண்டும் – பிரையன் லாரா

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் விராட் கோலி 67 பந்தில் சதம் அடித்தார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு வீரரின் மந்தமான சதம் இதுவாகும். 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் அவரது பேட்டிங் அதிரடியாக இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

இதனால் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கும் 20 ஓவர் உலகக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா அளித்த ஒரு பேட்டியில், ’20 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறைவாக இருக்கிறதே என்று கேட்கிறீர்கள். ஸ்டிரைக் ரேட் என்பது அணியில் இறங்கும் பேட்டிங் வரிசையை பொறுத்தது.

ஒரு தொடக்க வீரராக ஸ்டிரைக் ரேட் 130-140 என்பதே சிறப்பானது தான். மிடில் வரிசையில் ஆடும் போது ஸ்டிரைக்ரேட் 150 அல்லது 160 தேவைப்படலாம். இந்த ஐ.பி.எல்.-ல் கடைசிகட்டத்தில் தடாலடி பேட்டிங்கால் 200-க்கு மேல் ஸ்டிரைக் ரேட் எகிறுவதை பார்க்கிறோம். என்னை கேட்டால் கோலியின் பேட்டிங் சிறப்பாகவே இருக்கிறது. எது எப்படி என்றாலும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் கட்டாயம் இடம் பெற வேண்டும். தொடக்க வரிசையில் ஒரு அனுபவ வீரரும், இளம் வீரரும் இணைந்து ஆடினால் நன்றாக இருக்கும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.