`மோடி மீண்டும் வந்தால் சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படும்!' – தேனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தேனி அருகே லட்சுமிபுரத்தில் திமுக பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

தங்க தமிழ்ச்செல்வன், சச்சிதானந்தம்

அப்போது பேசி முதல்வர் ஸ்டாலின், “உங்கள் வாக்கு எம்.பி.யைத் தேர்வு செய்வதற்காக மட்டுமல்ல. உங்கள் வாக்குகளால்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜனநாயகவாதி வர முடியும். மக்களைப் பற்றி இரக்கப்படுபவராக வரமுடியும். தமிழ்நாட்டை மதிப்பவராக வரமுடியும்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியாவை அமளியாக்கிவிடுவார். மக்களை வேறுபடுத்தி நாட்டையே நாசம் செய்துவிடுவார்கள். நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக இருக்காது. மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்காது. சட்டமன்றங்கள் கூட இருக்குமா என்பது சந்தேகம். ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே பண்பாடு – ஒரே உடை – ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்.

பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்

மோடி ஷோ காட்டி வருகிறார். இதை நான் சொல்லவில்லை, அவரே ’ரோடு ஷோ’ காட்டுகிறேன் என்றுதான் சொல்கிறார். நேற்று சென்னையில் தியாகராயர் நகரில் ஷோ காட்டினார். அந்த இடம் நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர் – சவுந்திர பாண்டியனார் பெயரில் இருக்கும் பாண்டி பஜார், பனகல் அரசர் பெயரில் இருக்கும் பூங்கா என்று திராவிடக் கோட்டமாக இருக்கிறது. அந்த இடத்தில் மோடியின் ஷோ எடுபடாது.

சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாகக் கூறுகிறார். அந்தத் திட்டத்திற்கு தடையாக இருந்ததே அவர் தான். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை. அதனால்தான் திட்டப்பணிகள் தாமதமாகிறது. கடந்த 2020-இல் மத்திய உள்துறை அமைச்சர் இந்தத் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை. நான் முதலமைச்சரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தும் பலனில்லை.

பொதுக்கூட்டம்

மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறது. இந்தப் பணிகளால் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இதை மறைத்து பச்சை பொய் பேசுகிறார்.

ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க பொருத்தமான நபர் மோடி தான். ஊழலைச் சட்டப்பூர்வமாக்கியவர் மோடி தான். தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஊழல் பணத்தை நேரடியாகக் கட்சி வங்கிக் கணக்கிற்கு வரவும் – பி.எம். கேர்ஸ் நிதியாகவும் உருவாக்கிக் கொண்டார். வாஷிங் மெஷின் வைத்து ஊழல் அரசியல்வாதிகளை பா.ஜ.க.வுக்குள் சேர்த்துக் கொள்ளும் மோடி, ஊழலைப் பற்றி பேசக் கூடாது.

பிரதமர் மோடி

சமூகநீதியைப் பேசும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கைபோல் இருக்கிறது என்று கேலி செய்து பிரிவினைவாத அரசியல் செய்கிறார்கள். பத்தாண்டு கால சாதனைகளை கூற முடியாமல் மக்களைப் பிளவுப்படுத்தி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.