பாஜகவுக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்கினார் ஈஸ்வரப்பா!

பாஜக மேலிடம் சீட் வழங்காததால் கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தனக்கு ஷிமோகா தொகுதியிலும் தன் மகன் காந்தேஷுக்கு ஹாவேரி தொகுதியிலும் அவர் சீட் கேட்டார். ஆனால், பாஜக மேலிடம் சீட் வழங்கவில்லை. ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கும், ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் சீட் வழங்கியது.

இதனால் கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குவதாக அறிவித்தார். இதையடுத்து அமித் ஷா அவரிடம் பேசி, முடிவை கைவிடுமாறு கோரினார். அதற்கு ஈஸ்வரப்பா, ”கர்நாடக பாஜக எடியூரப்பா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அவரது இளையமகன் விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். இதனை அமித் ஷா ஏற்க மறுத்தார்.

இதையடுத்து ஈஸ்வரப்பா நேற்று ஷிமோகாவில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்த தொகுதியில் பாஜக, காங்கிரஸை தோற்கடிப்பேன். எனக்கு எதிராகசெயல்படும் எடியூரப்பாவுக்கும் பாஜக தலைவர்களுக்கும் தக்கபாடம் கற்பிப்பேன். எடியூரப்பா குடும்பத்திடம் இருந்து பாஜகவை விடுவிப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.