2 மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்.. பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம், வேமவுத் நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்டு ஸ்லேமன் (வயது 62). இவரது சிறுநீரகம் செயலிழந்ததால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. உடல்நிலை படிப்படியாக தேறிய நிலையில், கடந்த மாதம் (ஏப்ரல்) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகள் கிடைக்காமல் உலகம் முழுவதும் பல லட்சம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி டாக்டர்கள் வெற்றி கண்டதால் மருத்துவ உலகம் மிகுந்த நம்பிக்கை கொண்டது.

இந்த செயல்முறையானது உறுப்புகளை ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாற்றும் நவீன அறுவை சிகிச்சைக்கு ஒரு உதாரணம் என்றும், இதன்மூலம் நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உறுப்புகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை கூறியிருந்தது.

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உறுப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு மத்தியில், இந்த உறுப்பு மாற்று சிகிச்சையில் கிடைத்த வெற்றியானது புதிய நம்பிக்கையை அளித்தது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் எதிர்காலம் இனி இதுவாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும் மேலோங்கியது.

ஆனால், இந்த நம்பிக்கை நீண்ட நாள் நிலைக்கவில்லை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி மகிழ்ச்சியாக பொழுதை கழித்த ரிச்சர்டு ஸ்லேமன் நேற்று திடீரென உயிரிழந்தார். அவரது மரணம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை கூறி உள்ளது.

‘உலகெங்கிலும் உள்ள மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக ஸ்லேமேன் திகழ்வார். அவரின் நம்பிக்கை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் முன்னேற்றத்திற்கான அவரது பங்களிப்பிற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஸ்லேமேனின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்” என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லேமேனுக்கு பொருத்தப்பட்ட புதிய சிறுநீரகம் பல ஆண்டுகள் செயல்படும் என்று சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் விலங்கில் இருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை மாற்றுவதில் இன்னும் அறியப்படாத பல விஷயங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஸ்லேமேனுக்கு முன்னதாக பன்றியின் உறுப்புகள் இரண்டு நபர்களுக்கு பொருத்தப்பட்டன. பன்றியின் இதயங்கள் பொருத்தப்பட்ட அந்த இரண்டு நோயாளிகளும் சில வாரங்களுக்குப் பிறகு இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.