விஜய்யின் `தளபதி 69′ படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தைத் தெலுங்குத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதாக இருந்தது. சமீபத்தில் திடீரென அந்நிறுவனம் விலகியதால் படத்தைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே இருப்பதால், கட்சி வேலையை விஜய் தீவிரப்படுத்துவார், அதனால் `தளபதி 69′ படம் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து விஜய் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இங்கே!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கு அடுத்து விஜய்யின் 69-வது படமான ‘தளபதி 69’ படத்தின் அறிவிப்பு இன்னமும் வெளியாகாமல் உள்ளது. ‘தி கோட்’ (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, சின்னதொரு ரிலாக்ஸ் ட்ரிப் ஆக வெளிநாடு பறந்தார் விஜய். வரும் ஜூன் 22ம் தேதியில் அவரது பிறந்தநாள் வருவதால், அதற்கு முன்னதாக சென்னை திரும்புகிறார். இந்தப் பிறந்தநாளின் போது, படத்தின் டீசரோ அல்லது இரண்டாவது சிங்கிளோ வெளியாகலாம் என்றும் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்றும் தகவல்கள்.
விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களைச் சந்தித்து பரிசுகள் அளிக்கிறார். அதன்படி மாணவர்களை இம்மாதம் 28-ம் தேதி மற்றும் ஜூலை 3-ம் தேதி என இருகட்டங்களாகச் சந்திக்கிறார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. பொதுவாகவே விஜய்யை பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு படம் நிச்சயம் வெளியாகும். அதைப் போல இந்தாண்டு ‘தி கோட்’ வெளி வருகிறது. இதன் வெளியீட்டுக்கு முன்னர் அடுத்த படமான ‘தளபதி 69’-யின் படப்பூஜையோ அல்லது அதற்கான அறிவிப்போ வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘லியோ’ படத்தின் மூலம் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ், ‘தளபதி 69’-யின் தயாரிப்பாளராக இணைவார் என்றும் சொல்கிறார்கள். இப்போதைய தகவல்படி படம் டிராப் ஆக வாய்ப்பில்லை என்பதுதான் விஜய் தரப்பு தகவல். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்ட மாநாடும் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கும் ரெடியாக வேண்டியிருப்பதால், ‘மாநாடு’ குறித்த வேலைகளுக்கான திட்டமிடலும் தீவிரமாக நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.