இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, டர்னிப், நூல்கோல், பட்டானி, முள்ளங்கி முட்டை கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றை நீலகிரி விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக சைனீஸ் கேபேஜ், ஐஸ்பெர்க், லெட்யூஸ், லீக்ஸ், செலரி, சுகுனி, ஸ்பிரிங் ஆனியன், பார்ஸ்லி போன்ற சீன காய்கறி பயிர்களை சாகுபடி செய்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே ஊட்டியில் கூட்டுறவுத்துறை மூலமாக சைனீஸ் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மொத்த ஏல மண்டி இயங்கி வருகிறது. ஊட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த மண்டியில் விற்பனை செய்கின்றனர்.

ஊட்டியில் இருந்து பெங்களூர், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
சைனீஸ் காய்கறி சாகுபடிக்கான ஏற்றச் சூழல் நிலவி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அளவுக்கு அதிகமான வெயில் மற்றும் அதற்கு மாறான கனமழை காரணமாக தற்போது சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
சந்தைக்கும் சைனீஸ் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து வரும் நிலையில், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வழக்கமாக 100 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகும் ஐஸ்பெர்க், லெட்யூஸ் போன்ற காய்கறிகள் 400 ரூபாய்க்கு மேல் ஏலம் போகிறது.
இது குறித்து தெரிவித்த சைனீஸ் காய்கறி வணிகர் ஊட்டி ஆனந்த், ” வழக்கத்திற்கு மாறான வெயில் மற்றும் மழையின் தாக்கம் காரணமாகவே சைனீஸ் காய்கறிகளின் உற்பத்தி கடுமையாக பாதித்திருக்கிறது. இதனால், வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.
சாதாரண நாள்களில் ரூ.20 முதல் 40-க்கு விற்பனையாகி வந்த சுகுனி தற்போது ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது. லெட்யூஸ் ரூ .400 க்கும், ரூ.70-100க்கு விறபனையாகி வந்த புருக்கோலி தற்போது ரூ.250-க்கும் விற்பனையாகிறது.
ஐஸ்பெர்க் ரூ.425 க்கு ஏலம் போனது. சாதாரண நாட்களில் ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதி வரை விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

கேத்தி பாலாடா பகுதியைச் சேர்ந்த சைனீஸ் காய்கறி விவசாயி லிங்கராஜ் , ” சைனீஸ் கேபேஸ், ஐஸ்பெர்க் போன்றவற்றை பயிட்டு வருகிறேன். மழை, வெயில் பாதிப்பில் தப்பித்த பயிர்களை அறுவடை செய்து கொண்டு வந்தேன். எதிர்ப்பார்க்காக விலை கிடைத்தது. இதுவரை இந்த விலைக்கு விற்றதில்லை” என்றார் மகிழ்ச்சியுடன்.