இந்த நாட்களில் சிறார்களுக்கு சளி மற்றும் இருமல் அதிகரித்து வருவதுடன், இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்திற்கு இன்று (15) கருத்து தெரிவிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குளிர் நாடுகளில் இன்புளுவன்சா நோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்கப்படுகிறது. 02 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள்;, கர்ப்பிணித் தாய்மார்கள், நாட்பட்ட சுவாச நோய் உள்ளவர்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இன்புளுவன்சா காய்ச்சல் பரவாமல் தடுக்க, நோய் அறிகுறி உள்ளவர்கள் முகக்கவசம்; அணிய வேண்டும், நோய் அறிகுறி உள்ள குழந்தைகளை முன்பள்ளி, பாடசாலை, பராமரிப்பு மையம் என்பவற்றிற்கு அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இலகுவாக பரவக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கூறியவர்களுக்கு இத்தொற்று நோய் பரவினால்;, அது ஆபத்தானது, நிமோனியா ஏற்படக்கூடும். மற்றும் தீவிர சிகிச்சை வழங்க வேண்டும். இந்த தொற்றுக்கான அறிகுறிகள் விரைவில் தெரிந்தால், பராசிட்டமோல் மருந்தினை வழங்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் உடலைக் கழுவி காய்ச்சலைக் குறைக்க வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை, அவர்களுக்கு ஓய்வு அவசியம் என்றும், இயற்கையான பானங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.