CSK: கான்வே, ரவீந்திரா இல்லையென்றால்… சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

Chennai Super Kings Latest News Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதன் ரசிகர்களும் வரும் ஐபிஎல் 2025 சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. மீண்டும் ஒரு சீசனில் தோனி விளையாடுவதை பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு உள்ளனர். அதுமட்டுமின்றி, அஸ்வின் – ஜடேஜா – தோனி ஆகியோர் ஒன்றாக இணைந்து விளையாட இருப்பதும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

அப்படியிருக்க பல்வேறு புதுப்புது முகங்களும், முன்னாள் வீரர்களும் அணியில் இணைந்துள்ளதால் கிரிக்கெட் உலகமும் சிஎஸ்கேவின் ஆட்டத்தை எதிர்பார்த்துள்ளது எனலாம். தொடர்ச்சியாக இரண்டாவது சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட இருக்கிறார். பந்துவீச்சு பயிற்சியாளரான பிராவோவும் வெளியேறிய நிலையில், புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் யார் என்பதும் அதிகம் கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.

கான்வே, ரவீந்திரா வாய்ப்பில்லை

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கரண், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, நாதன் எல்லீஸ், மதீஷா பதிரானா என 7 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, பதிரானா ஆகியோர் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம்பெறக்கூடியவர்கள் எனலாம். அப்படியிருக்க, டெவான் கான்வே (Devon Conway) மற்றும் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) ஆகியோர் இந்தாண்டு ஐபிஎல் சீசனில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என தகவல் தெரியவந்துள்ளது.

மாற்று பிளேயிங் லெவன்

வரும் மார்ச் மாதம் பாகிஸ்தானுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளதால் இவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது கடினம் ஆகும். மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் என்பதால் இவர்கள் குறைந்தபட்சம் முதல் பாதி தொடரையாவது தவறவிடுவார்கள் என கூறப்படுகிறது. ஒருவேளை அவர்கள் விளையாடாவிட்டால் சிஎஸ்கேவுக்கு சில பிரச்னைகள் இருக்கும். இருப்பினும் சில நன்மைகள் உள்ளது. அப்படியிருக்க அவர்கள் இல்லாவிட்டால் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் (CSK Playing XI) எப்படியிருக்கும் என்பதை இங்கு காணலாம்.

பேட்டிங் ஆர்டர்

ருதுராஜ் கெய்க்வாட் உடன் அவரின் மகாராஷ்டிரா பார்ட்னர் ராகுல் திரிபாதி ஓப்பனிங்கில் இறங்கலாம். இருவரும் பவர்பிளேவில் சிறப்பான ஷாட்களை அடித்து ரன்களை குவிப்பதில் கில்லாடிகள். தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் ரச்சின் ரவீந்திராவுக்கு பதில் தீபக் ஹூடா களமிறங்கலாம். அவர்களை தொடர்ந்து சிவம் தூபே, ஜடேஜா, தோனி, அஸ்வின் இறங்குவார்கள்.

பௌலர்கள் யார் யார்?

சாம் கரன் அல்லது ஓவர்டன் ஆகியோரில் ஒருவரை நம்பர் 8இல் விளையாடலாம். நூர் அகமது அல்லது நாதன் எல்லீஸை சூழலுக்கு ஏற்ப விளையாடலாம். பதிரானா மற்றும் கலீல் அகமது ஆகியோர் முதல்கட்ட பிளேயிங் லெவனில் இருப்பார்கள். தீபக் ஹூடாவை நீக்கிவிட்டு சாம் கரன் மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடலாம். நம்பர் 8இல் அன்சுல் கம்போஜை கூட நாம் விளையாட வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.