நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 17வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக் கே. எல். ராகுல் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கும் களம் இறங்கினார். ஆனால் மெக்கர்க் டக் அவுட் ஆனார். இதையடுத்து அபிசேக் போரல் களம் இறங்க, இந்த கூட்டணி களத்தில் நின்று ரன்களை சேர்த்தது. 54 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் போரல் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் படிங்க: சேப்பாக் வந்த தோனியின் பெற்றோர்.. ஓய்வு பெறுகிறாரா?
தொடர்ந்து அக்சர் 21, சமர் ரிஷ்வி 20 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், கே. எல். ராகுல் அரைசதம் கடந்து 77 ரன்கள் எடுத்த நிலையிலே ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்டப்ஸ் 24 ரன்களுடன் இறுதி வரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பாக கலீல் அகமது 2 விக்கெட்களும், ஜடேஜா, நூர் அகமது, பதிரானா ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. நடப்பாண்டில் இதுவரை விளையாடாமல் இருந்த டேவான் கான்வே இப்போட்டியில் களம் இறங்கினார். உடன் ரச்சின் ரவீந்தரா வந்தார். ஆனால் அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அடுத்தடுத்து சென்னை பேட்டர்கள் பெவிலியன் திரும்பினர். சென்னை அணியால் நினைத்த படி பேட்டி செய்ய முடியவில்லை. கான்வே 13. கேப்டன் கெய்க்வாட் 5, சிவம் துபே 18, ஜடேஜா 2 ரன்கள் என ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து தோனி – விஜய் சங்கருடன் கைகோர்த்தார். இந்த கூட்டணி கடைசி வரை களத்தில் நீடித்தாலும் இவர்களால் அணிக்கு வெற்றியை தேடி தர முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 158 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. விஜய் சங்கர் 69 ரன்களும் தோனி 30 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி சார்பாக விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்களையும் குல்தீப், ஸ்டார்க், முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர். சென்னை அணிக்கு இந்த தொடரில் இது மூன்றாவது தோல்வி ஆகும். 4 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில், அதில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: பும்ரா இந்த ஆண்டு ஐபிஎல்லில் இல்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!