கொல்கத்தா,
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது.
வெற்றிக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியிடன் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த தோனி, எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. நான் நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என்று யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதங்களுக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.