சென்னை: கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலக மாநாட்டுக் கூட்ட அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 34 அரசு ஊழியர்களின் பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
உள்கட்டமைப்பு பணிகள்: பின்னர், கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கால்நடைகளின் நலனைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வருமானம் பெருக்கும் நோக்கத்தோடும் செயல்படுத்தப்பட்டு வரும் துறையின் முக்கிய நடவடிக்கைகள், திட்டங்கள், உட்கட்டமைப்புகள், பண்ணைகள் குறித்த செயல்பாடுகள் மற்றும் துறையின் இதர பணிகள் குறித்து ஆய்வு அமைச்சர் மேற்கொண்டார்.
மேலும், துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றிப் பசுந்தீவனம் கிடைக்கும் வகையில், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்குமாறு வலிறுத்தினார்.
ஆண்டுக்கு ஒரு கன்று: பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து செயற்கை முறை கருவூட்டல் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், ஆண்டுக்கு ஒரு கன்று எனும் இலக்கை அடைவது குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார். ஆய்வுக் கூட்டத்தில், துறைச் செயலர் நா.சுப்பையன், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் இரா.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.