சென்னை: “முதலில் பாமகவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும். அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே வெட்டு, குத்து நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடியும்?” என்று தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திரு வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் பகுதிகளில், அமுத கரங்கள் நிகழ்ச்சிக்கு முன்பாக, அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில், மக்கள் குறைகளை கேட்கும் நிகழ்வினை தொடங்கியிருக்கிறோம். ஏற்கெனவே மேயர் தலைமையில் மக்களைத் தேடி மாநகராட்சி என்ற பெயரில் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்பாட்டினை இன்று முதல் துவங்கியிருக்கிறோம்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், புகார் கொடுத்து இரண்டு மூன்று நாட்களாகியும் அப்போதைய அதிமுக அரசு புகாரை ஏற்கவில்லை. அதன்பின்னர் திமுக தலையிட்டு கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தம், ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டமன்றத்தில் அப்பிரச்சினை தொடர்பாக பேசியதால், வேறுவழியில்லாமல் அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினார்.
இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை என்பது , இனி வரும்காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். இந்த வழக்கை வெளிக்கொண்டுவர முழுக்க முழுக்க அழுத்தம் கொடுத்த தமிழக முதல்வரை பெண்கள் போற்றி புகழ்கின்றனர். அந்த வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.
நீலகிரி சென்று முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்கவில்லை. தினம்தோறும் அங்கும் மக்கள்பணி தான் செய்தார். பள்ளி, மருத்துவமனைகளில் ஆய்வு, யானைகள் முகாமில் ஆய்வு, யானைப் பாகன்களுக்கான வீடுகளைத் திறந்துவைத்துள்ளார். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை ஓய்வு என்பது இல்லை. நாட்டில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் விரல்நுனியில் வைத்திருப்பார். கடந்த கால முதல்வரைப் போல, நடந்த சம்பவங்கள் எனக்கு தெரியாது. நான் டிவியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று கூறும் நிலையில் இன்றைய முதல்வர் இல்லை, என்றார்.
அப்போது, “படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறுவேன்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அனைவருமே அரசியல் ரீதியாக கூறுவதுதான். முதலில் அவர்களுடைய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும். அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே வெட்டு, குத்து நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடியும்?
அப்படியென்றால், மக்களே பார்த்துக் கொள்ளுங்கள். மக்களின் மீது நாட்டமில்லாதவர்கள், மக்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் இவ்வாறு கூறுவார்கள். மக்களை நாடிச் செல்பவர்கள்தான் உண்மையாக மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும். மக்கள் சேவகர்களாக இருக்க முடியும். எனவே, அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, என்று அவர் கூறினார்.