வெளிநாடுகளுக்கு ‘அமைதிக் குழு’; இந்தியா அறிவித்த நிலையில் பாகிஸ்தானும் ஏற்பாடு

இஸ்லாமாபாத்: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்குவதற்காக முக்கிய நட்பு நாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் கொண்ட குழுக்களை இந்தியா அனுப்பவுள்ள நிலையில், பாகிஸ்தானும் அமைதிக்கான தனது தரப்பு நிலைப்பாட்டை விளக்கும் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறது.

முன்னதாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் (பிபிபி) பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் உருவாகியிருக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை விளக்க ஒரு குழுவினை வழிநடத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெரிஃப் தன்னைக் கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்திருதார். அதனைத் தொடர்ந்து இந்த விஷயம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சர்தாரி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இன்று பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் என்னை அழைத்து அமைதிக்கான பாகிஸ்தான் தரப்பு முயற்சிகளை உலக அரங்கில் விளக்குவதற்கான குழுவினை வழிநடத்துமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். இந்த இக்கட்டான நேரத்தில் இந்த சவாலான பணியினை ஏற்றுக்கொள்வதையும், தேசத்துக்கு சேவையாற்றுவதையும் பெருமையாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கிறது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொண்டுவரும் பாகிஸ்தான் தனது நற்பெயரை சரி செய்வதற்கான முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாலும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து தாக்கிய இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக பொதுமக்களை குறிவைத்து தாக்கி நம்பகத்தன்மையை குறைத்துக் கொண்டதாலும், சர்தாரியின் குழு ஒரு பெரும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக சனிக்கிழமை, அனைத்துக் கட்சி குழு குறித்த அறிவிப்பைப் பகிர்ந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மிக முக்கியமான தருணங்களில், பாரதம் ஒற்றுமையாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற செய்தியை எடுத்துச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்வார்கள். வேறுபாடுகளுக்கு அப்பால், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு.” என்று தெரிவித்திருந்தார்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் புகழ்பெற்ற தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறுவார்கள். பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பிரதிதிதிகள் குழுக்களை வழிநடத்துவார்கள்:

1) சசி தரூர், இந்திய காங்கிரஸ் கட்சி
2) ரவிசங்கர் பிரசாத், பாஜக
3) சஞ்சய் குமார் ஜா, ஜே.டி.யு
4) பைஜயந்த் பாண்டா, பாஜக
5) கனிமொழி கருணாநிதி, தி.மு.க
6) சுப்ரியா சுலே, என்சிபி
7) ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.