நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் கமல் ஹாசனும், இயக்குநர் மணிரத்னமும் இணைந்திருப்பது தக் லைஃப் படத்திற்குத்தான்.
தக் லைஃப் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் சிம்புவின் ஸ்கிரீன் பிரசன்ஸும், அவரின் நடிப்பும் பெருமளவு அவரின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.

வரும் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் திரைப்படத்தில் நடித்திருந்த சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட திரைப்பட்டாளமே வந்திருந்தது.
அதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “’முதலில் எனக்கு ஜோஜு ஜார்ஜை யார் என்று தெரியாது. அவரது ‘இரட்டா’ படத்தைப் பார்க்கச் சொன்னார்கள்.
அதைப் பார்த்து நான் மிரண்டுவிட்டேன். ஏனெனில் நான் 30-க்கும் மேற்பட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன்.
ஆனால் அந்தப் படத்தைப் பொறுத்தவரை ஜோஜு ஜார்ஜ் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடக்கும் கதையாகத்தான் அது இருக்கும்.

ஆனால், இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசம் தெரியும். படம் பார்க்கும்போதே இரட்டை வித்தியாசம் கண்டுபிடித்துவிடலாம்.
அதனைப் பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன் ஜோஜு” என்றார்.
இந்த வார்த்தைகளைக் கமல் ஹாசன் பேசிக் கொண்டிருக்கும்போதே ஜோஜு ஜார்ஜ் கண்கலங்கி நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனைக் குறிப்பிட்டு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மிக்க நன்றி கமல் சார். என் கனவு நனவானது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
எனக்கு மிகப் பெரும் விருதுகளை வாங்க வேண்டும் என்பதுதான் என் கனவு. என் நடிப்பு குறித்த உங்களின் வார்த்தைகளும், பாராட்டும் என்னை ஆஸ்கர் வாங்கிய மனநிலைக்குத் தள்ளியிருக்கிறது.
நீங்கள் மாபெரும் திரைநட்சத்திரம், எங்களின் உலகளாவிய ரோல் மாடல்.

நான் உங்களின் தீவிர ரசிகன், நல்ல சீடன். நடிப்பில் உங்களின் ஒவ்வொரு நிமிட செய்கைகளையும் தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
எனவே, உங்களிடமிருந்து வந்த பாராட்டுதான் எனக்கான ஆஸ்கர். என் கதாபாத்திரம் மிகச்சரியாக வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்.
என் துறையைச் சேர்ந்தவர்கள் என் உழைப்பைப் பார்த்து நான் எப்படிக் கடின உழைப்பைப் போட்டிருக்கிறேன் எனப் பேச வேண்டும் என எதிர்பார்த்தேன்.
ஆனால், என் துறையைச் சேர்ந்த சிலரிடமிருந்துதான் சில கதாபாத்திரத்திரங்களுக்கும், சில படங்களுக்கும் அப்படியான பாராட்டுகள் வந்திருக்கின்றன.
பல செலிபிரிட்டிகளுடன் என் திரைப்பட போஸ்டர்களைப் பகிர்ந்துகொள்வதற்குக் கூட சிரமப்பட்டிருக்கிறேன். பல தருணங்களில் நான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன்.
பல ஊடகங்களும், என்னுடன் பணியாற்றுபவர்களும் என்னை மோசமாகக் காயப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இன்று கமல் சாரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை ஜோசப் படம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
இந்தப் பாராட்டுக்குப் பிறகு இனி என் வாழ்வில் நான் செய்யப் போவதெல்லாம் வெறும் போனஸ்தான். ஒரு மனிதனாக கமல்சாரின் வார்த்தைகளால் நான் முழுத் திருப்தியடைந்துவிட்டேன்.
மணி, சிம்பு போன்றோரின் வார்த்தைகளால் நான் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்திலிருந்தேன். தக் லைஃப் படத்தில் பணியாற்றியது நல்ல நினைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தக் லைஃப், ஒரு கலை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தலைசிறந்த படைப்பாக, வாழ்க்கையில் முன்னேற எனக்கு உந்துதலைக் கொடுத்தது.
எனது நேர்மறைகளைக் கருத்தில் கொள்ளாமல், எதிர்மறைகளை மட்டுமே பார்த்து அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருந்தேன். இப்போது நான் மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன்.

இந்தப் பாராட்டுகளை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். மணி சார், என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தையும் உங்களுடன் பணியாற்றுவதற்கான அற்புதமான வாய்ப்பையும் வழங்கியதற்கு நன்றி.
நான் சினிமாவை நம்புகிறேன், என் பயணம் தொடர்கிறது… அனைவருக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…