கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

சென்னை: வட சென்னை, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர், கொடுங்கையூரில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட பழைய குப்பைகளை அகழ்ந்தெடுத்து மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு சுற்றுச்சூழல் பூங்கா வரும் என அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அங்கு மக்காத, மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலையை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் பணியை, டெல்லி எம்எஸ்டபிள்யூ நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்கியுள்ளது. இத்திட்டம் ரூ.1,248 முதலீட்டில், அரசு, தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக கொடுங்கையூரில் 75 ஏக்கர் இடத்தை மாநகராட்சி வழங்கியுள்ளது. இதில் நாளொன்றுக்கு 3750 டன் குப்பை கையாளப்பட உள்ளது. தினமும் 2100 டன் குப்பையிலிருந்து 31 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி, வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் கொடுங்கையூரில் நடைபெற்றது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகில் மக்கள் குடியிருக்கும் எழில் நகரில் இருந்து தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, கண்ணதாசன் நகர் வழியாக மீனாம்பாள் சாலை, கேப்டன் காட்டன் கால்வாய் பாலம் மற்றும் மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரி வரை, அப்பகுதி குடியிருப்புவாசிகள் நீண்ட வரிசையில், கொடுங்கையூரில் எரிஉலை திட்டம் வேண்டாம் என வலியுறுத்தும் பதாகைகளுடன், முகக்கவசம் அணிந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, எரிஉலை திட்டம் வேண்டாம் என அச்சிடப்பட்ட பேனரில், நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டு இந்த மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, எரிஉலை திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என மனித சங்கிலியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இப்போராட்டம் குறித்து, வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம் கூறும்போது, “கொடுங்கையூரில் எரிஉலை திட்டம் வந்தால், இப்பகுதியில் காற்று நஞ்சாகிவிடும். பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படும். மாநகராட்சி நிர்வாகம் பாரீஸ், ஹைதராபாத் மாடல் எனக்கூறி, எரிஉலை திட்டத்தை கொண்டு வருகின்றனர்.

அங்கெல்லாம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறோம். இதன் பிறகும் எரிஉலை திட்டத்தை செயல்படுத்த முயன்றால், எங்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும். எரிஉலை திட்டத்தை ராஜா அண்ணாமலைபுரத்தில், பசுமைவழிச் சாலையில் அமைக்க வலியுறுத்தி போராடுவோம்” என்றார்.

நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் கூறும்போது, எரிஉலை திட்டம் இங்கு கொண்டு வந்தால், காற்று, நீர், நிலம் என அனைத்தும் பாதிப்படைந்து, இப்பகுதியின் சுற்றுச்சூழலே மோசமாக பாதிக்கப்படும். மக்காத குப்பையை அழிக்க எரிஉலை தீர்வாகாது. மாற்றுவழியை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும். மக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் திட்டத்தை கொண்டுவரக்கூடாது” என்றார்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயராமன், டில்லிபாபு, ஜீவன், விமலா ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: சென்னை கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் ஜூன் 2-ம் தேதி தண்டையார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் ஜூன் 2-ம் தேதி காலை 10 மணிக்கு, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டம் கட்சியின் மகளிரணி செயலாளர் ப.வளர்மதி தலைமையிலும், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் முன்னிலையிலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.