கொழும்பு: இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை எச்சரித்துள்ளது.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள். இது இலங்கையின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்சினையை நாங்கள் இந்தியத் தரப்பிடமும் எடுத்துச் செல்கிறோம். இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது” என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இரண்டு மாதம் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14, 2025 வரை இந்த வருடாந்திர தடைக்காலம் அமலில் இருந்தது. பாக் ஜலசந்தியில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தடைக்காலம் முடிவடைந்த உடனேயே, தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கத் தொடங்கினர். ஜூன் 30, 2025 அன்று அதிகாலை மன்னாருக்கு வடக்கே 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து 19 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள) மைலிட்டி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த பிரச்சினையை தூதரக ரீதியாக இந்தியாவிடம் கொண்டு செல்வதோடு, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு, இலங்கை கடற்படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.
பல பத்தாண்டுகளாக நீடிக்கும் பாக் ஜலசந்தி மீன்பிடி மோதல் தமிழ்நாட்டிலும், வடக்கு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் உள்ள ஏழை மீனவர்களைப் பாதித்து வருகிறது. இதற்குத் தீர்வு காணும் நோக்கில், 2016-ம் ஆண்டு இந்திய – இலங்கை அரசுகள் ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைத்தன. இந்த குழு, இழுவை மீன்பிடி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், அக்குழு எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய யாழ்ப்பாண நகரத்திலிருந்து வடமேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மீன்பிடி கிராமமான காரைநகரில் மீனவர் குழுக்களின் கூட்டமைப்பை வழிநடத்தும் கே.ராஜச்சந்திரன், “தடை அமலில் இருந்தபோதும், மழை மற்றும் பலத்த காற்று காரணமாக எங்கள் மீனவர்களின் வருமானம் இந்த பருவத்தில் குறைந்துவிட்டது. எங்கள் நாட்டில் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் சிரமப்படுகிறார்கள். எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்திய இழுவை படகுகள் திரும்பி வருமோ என்று நாங்கள் அஞ்சிக்கொண்டிருந்தோம். இப்போது அவை திரும்பி வந்துவிட்டன,” என்று தெரிவித்தார்.
இரு தரப்பு மீனவர் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதுதான் ஒரே வழி என்று தெரிவித்துள்ள ஊர்காவல்துறை மீனவர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா, பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை அரசாங்கம் விரைவில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.