பெங்களூரு,
கர்நாடக காங்கிரசில் குழப்பமான சூழல் நிலவு கிறது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனித்தனியாக பேசினார். அதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய மாநில நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்பதாக அறிவித்தார்.
அதன்படி நேற்று 2-வது நாளாக அவர் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அதாவது அவர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தனியாக சந்தித்து கருத்துகளை கேட்டார்.சிலர் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மீது அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களை அவர் சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அத்துடன் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோருக்கு எதிராக கருத்து கூற கூடாது எனவும் அவர் அறிவுறுத்தி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் மேலிட ஒப்பந்தப்படி சித்தராமையா 2½ ஆண்டுகளும், டி.கே.சிவக்குமார் 2½ ஆண்டுகளும் முதல்-மந்திரி பதவி வகிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சித்தராமையாவின் பதவிகாலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி ஆவார் என அவரது ஆதரவாளர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா எம்.பி., எம்.எல்.ஏ.க் களை சந்தித்து பேசிவருவது, முதல்-மந்திரி மாற்றத்திற்காக தான் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியதாவது:- நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கருத்து கூறியுள்ளனர் என்பதை அறிந்தேன். கட்சியில் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒழுக்கம் தான் முக்கியம். ஆட்சி தலைமை (சித்தராமையா) மாற்றம் செய்யப்படாது. இதுகுறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. பதவியை நோக்கி யாரும் அவசரத்தில் இல்லை. வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் தான் எங்களுக்கு முக்கியம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்றார்.