ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து

வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கு நான்கு நாள் பயணமாகச் சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியாவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் இந்த மசோதா குறித்து எப்போதும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவை ஆதரித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த மசோதாவில் எங்கள் கவலைகள் மற்றும் அக்கறைகள் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல எரிசக்தி பாதுகாப்பில் எங்கள் கவலைகள் மற்றும் நலன்கள் குறித்தும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த மசோதா வரும்போது, நாங்கள் அந்தப் பாலத்தைக் கடப்போம்” என்று கூறினார்

முன்னதாக, குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் போது, ​​அவர் இந்தியா மற்றும் சீனாவைப் பற்றி முக்கியமாக குறிப்பிட்டார். “இந்த இரு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெயில் 70% வாங்குகின்றன என்றும், இவர்களே புதினின் போர்ச்சக்கரத்தை சுழற்றுகின்றனர்” என்றும் கிரஹாம் குறிப்பிட்டார்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இந்த புதிய தடைகள் மசோதாவை ஆதரித்துள்ளார். இம்மசோதா இந்தியா, சீனா உட்பட ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500% அதிக வரியை விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா மூலம் உக்ரைன் போரில், ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுத்து புதினை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

தற்போது ரஷ்யாவிலிருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இது இந்தியாவின் எரிசக்தி தேவைகளில் சுமார் 40-45% அளவுக்கு பூர்த்தி செய்கிறது. கடந்த மே மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு நாளைக்கு 1.96 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.