ஜெர்மனியில் சத்குருவிற்கு "புளூ டங்" விருது வழங்கி கவுரவம்

ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘கிரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக கிரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

ஜெர்மனியில் செயல்பட்டு வரும் “கிரேட்டர் (Greator)” எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இதில் உலக அளவில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக புகழ் எழுத்தாளர்கள் டோனி ராப்பின்ஸ், கேரி வீ உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மேலும் அந்நிறுவனம் சார்பில், சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் “புளூ டங்” (Blue tongue) என்ற விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டிற்கான விருது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இது குறித்து கிரேட்டர் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “சத்குரு நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவர். அவரது தெளிவான, ஆழம்மிக்க, அடிப்படையான ஞானம் மற்றும் நுட்பமான நகைச்சுவைக்காக உலகம் முழுவதும் அவர் கொண்டாடப்படுகிறார். அவரது வார்த்தைகள் நம்மை விழித்தெழச் செய்கின்றன, நமது எல்லைகளை விரிவுபடுத்துகின்றன மற்றும் நேரடியாக இதயத்தைத் தொடுகின்றன.

அதனால்தான் இந்த ஆண்டின் “புளூ டங்” விருது சத்குருவுக்கு வழங்கப்படுகிறது. அவரது துணிச்சலான குரல், ஆழமான ஞானம் மற்றும் அசைக்க முடியாத தெளிவுக்காக இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.