சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த பிரகாஷ்ராஜ் உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு

புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணீதா உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேநேரத்தில், சில செயலிகள் திறமையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுக்கள் என்ற பெயரில் சூதாட்டங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்ட ஜங்லீ ரம்மி, ஜீட்வின், பாரிமேட்ச், லோட்டஸ் 365 போன்ற செயலிகளுக்கு ஆதரவாக விளம்பரங்களில் நடித்ததாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய தேவரகொண்டா, ராணா டகுபதி, மஞ்சு லட்சுமி, பிரணீதா, நிதி அகர்வால், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக பிரமுகர்கள் அனன்யா நாகெல்லா, ஸ்ரீமுகி, வர்ஷீனி சவுந்தரராஜன், வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட 29 பேர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இவர்களுக்கு எதிராக விசாகப்பட்டினம், சூர்யாபேட்டை, சைபராபாத், மியாப்பூர், பஞ்சகுட்டா ஆகிய 5 இடங்களில் தனித்தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பொழுதுபோக்கு, சமூக சேவை என்ற பெயரில் இந்த செயலிகள் பொதுமக்களை கவர்வதாகவும், பின்னர் சூதாட்டத்தில் தள்ளுவதாகவும் காவல்நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார்தாரர்களில் ஒருவர் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் சிலர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர். செயலியின் சட்டவிரோத செயல்பாடு தெரிந்ததும் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.